கோரிக்கைகளை திசை திருப்பும் வகையில் தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அவதூறாக பேசுவதா?: அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும், நாட்டுப் படகுகளையும் மீட்டுத் தரக் கோரியும், இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு செவிமடுக்காத நிலையில், திருவோடு ஏந்தும் போராட்டம், தீக்குளிப்பு போராட்டம் என அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது வேடிக்கை பார்ப்பதன் மூலம் மீனவர்களை மூன்றாம் தர குடிமக்களாக மத்திய அரசு பார்க்கிறதா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து, இந்திய குடிமக்களாகிய தமிழக மீனவர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் இந்தப் போராட்டத்தையும், மீனவர்களின் கோரிக்கைகளையும் திசை திருப்பும் வகையில், மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் அதனால் தான் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்கிறது என மிக அபாண்டமான அவதூறு தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாகவும், மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தியும் மீனவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுக்கும் அனைத்து வகையான ஜனநாயக போராட்டங்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post கோரிக்கைகளை திசை திருப்பும் வகையில் தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அவதூறாக பேசுவதா?: அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கட்சி தலைவர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: