திருவள்ளூர், மார்ச் 1: அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் ஒன்றியம், செவ்வாப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என பள்ளி சார்பில் பூந்தமல்லி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பரிந்துரையின் பேரில், ரூ.1.20 கோடி மதிப்பில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ். திலீப்ராஜ், ஆல்பர்ட், டெய்சிராணி அன்பு, குமரேசன், தாஸ், எட்வின், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அடுத்த கல்வி ஆண்டிற்குள் கட்டுமானப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என எம்எல்ஏ கிருஷ்ணசாமி தெரிவித்தார். இதனையடுத்து, செவ்வாப்பேட்டை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
The post செவ்வாப்பேட்டை அரசு பள்ளியில் ரூ.1.20 கோடியில் அறிவியல் ஆய்வுக்கூடம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.
