துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

துறையூர், பிப்.28: திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.53 லட்சத்திற்கு பருத்தியை பொது ஏலத்தில் விற்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் சுமார் 200 பேர் தாங்கள் உற்பத்தி செய்த 815.67 குவிண்டால் பருத்தியை 2185 மூட்டைகளில் கட்டி துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பொது ஏலத்தில் விற்பதற்காக கொண்டு சென்றனர்.

பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், செம்பனார் கோயில், நாமக்கல், பெரகம்பி, விழுப்புரம், கரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் 13 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியை குறைந்த பட்சமாக ரூ. 6069க்கும், அதிக பட்சமாக ரூ. 7699க்கும் ஏலம் கோரப்பட்டது. முடிவில் ரூ.52 லட்சத்து 73ஆயிரத்து 005க்கு பருத்தி விற்கப்பட்டது.

திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சொர்ணபாரதி தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தங்கதுரை, உரிம ஆய்வாளர் அன்புசெல்வி, மேற்பார்வையாளர் மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் ஏலத்தை முன்னின்று நடத்தினர்.

The post துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ₹53 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: