ராஜகோபுர மனசு

(வல்லாள கோபுரக் கதை)

பகுதி 15

கட்டுமானப் பணிகளை பார்வையிட, அழகிய புன்னகையோடு அசைந்தாடியபடி, இளவரசர் அருணாச்சலேஸ்வரர், இரவீந்திரப் பெருந்தச்சனோடு முன்னே நகர்ந்தார். மாதப்பதண்ட நாயகர் அவர்களை, தன்படைவீரர்களோடு பின்தொடர்ந்தார். முதலில் பல்லக்கு, கிழக்குகோபுரம்முன் போய்நின்றது. மன்னர்முன் நிற்கின்ற அதேபணிவுடன், பல்லக்கின்முன் நின்றுகொண்ட பெருந்தச்சர், முடிந்த கிழக்குகோபுரப் பணிகளைப்பற்றி விவரித்தார். ஓவியங்களை விரித்து, விளக்கினார். அப்படி பெருந்தச்சர் விளக்கிமுடித்து, நின்றதும், “சரி, அடுத்து” என்கிற பாவனையில், இளவரசரின் பல்லக்கு லேசாக சாய்ந்து அசைய, அருகே நின்ற அந்தணர், “அடுத்த இடம்நோக்கி நகரலாமென்பது இளவரசரின் உத்தரவு” என்றுகூற, பாறையறுக்கும் இடம்நோக்கி பல்லக்கு நகர்ந்தது. அங்கும் நடக்கும் வேலைகளை பெருந்தச்சர் எடுத்துரைத்தார். இப்படி, ஒவ்வொரு இடத்திலும் பல்லக்கு நிற்க, இந்தபாவனைகள் தொடர்ந்தன.

நடக்குமிந்த பாவனைகளை ஆச்சர்யத்துடன் ரசிக்கவும், அருணாச்சல இளவரசரை தரிசிக்கவும், ஜனங்கள் முன்னும், பின்னும் அல்லாடினர். பல்லக்கிலிருப்பது சிலைதான் என்றாலும், அந்த நினைப்பே மக்களுக்கில்லை. அவர்களுக்குள், வந்திருப்பது ரத்தமும், சதையுமாக, உயிர்ப்புடன் நம் இளவரசர் என்கிற பாவனையும், நம்மன்னரின் மகனாக, அருணாச்சலேஸ்வரரே வந்திருக்கிறார் என்கிற சந்தோசம் கலந்த வியப்பும் நிரம்பிவழிந்தது.

அந்த வியப்பும், பாவனையும், அவர்களை உச்சி முதல் பாதம் வரை ஒருவித கிறக்கத்தில் தள்ள, அந்த பரவசத்துடனேயே, எல்லோரும், “அருணையின் இளவரசர், எங்கள் அருணாச்சலேஸ்வரர் வாழ்க.. வாழ்க..” என கோஷமிட்டபடி, முண்டியடித்துக் கொண்டு, இளவரசரை தொடர்ந்தனர். எல்லோரும் கோஷவொலி முழங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ வயதான கிழவரொருவர், நடுங்கும் குரலோடு தேவாரப்பதிகமொன்றை பாடினார்.

“உண்ணாமலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்” என ஆரம்பித்தார். நெற்றிமுழுதும் நீறணிந்து சிவபழமாய் காட்சி அளித்தவரின் குரல்கேட்டு, கூட்டம் மெல்லமெல்ல அமைதியானது. கிழவனார் மீண்டும் முதலிலிருந்து பாட, அவரோடு சேர்ந்து மொத்தகூட்டமும் பாடியது.

“உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை
திரு மாமணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே’’

மொத்த ஜனங்களும், அந்த தேவாரப் பதிகத்திற்கு மயங்கின. அதுவரை, வந்திருப்பது மன்னரின்மகன் என்கிற பாவனையிலிருந்த எல்லாரின்மனதிலும், பதிகத்தை கேட்ட மயக்கத்தில், பல்லக்கிலிருப்பது `‘நமையாளும் ஈசன்” என்கிற பணிவும், பக்தியும் நிரம்பி வழிந்தது. அந்த பணிவும், பக்தியும் கலந்த உணர்வினால், கிழவர் பாடிமுடித்ததும், “எம்சிவமே, எம்சிவமே. எமையாளும் அருணையின் சிவமே’’ என மொத்தக் கூட்டமும் பெருங்குரலில் பாடின. அடுத்து, தொண்டைக்குழி முட்டும்படி உருத்திராட்சம் அணிந்திருந்த இளைஞனொருவன், வேறொருபதிகம் பாடினான்.

“உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ
அன்னான் காண்;உகப்பார் காணப்
பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற
நால் வேதத்தின் பண்பினான் காண்;
அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி
இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்;
கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் –
காளத்தியான் அவன், என் கண் உளானே’’.

ஜனங்கள் “எம்சிவமே, எம்சிவமே. எமையாளும் அருணையின் சிவமே.” என தொடர்ந்தன. இளைஞன் பாடபாட, கூட்டம் மேலும் கிறங்கியது. குறிப்பாக, அவன் “காண், காண்” என பாடி, பல்லக்கை நோக்கி, கைகள் காட்டும்போது, ஒருவித உன்மத்த நிலையில் தவித்தது. தேவார தமிழிலுள்ள பக்திருசி, அங்குள்ள அனைவரின் மனக்கண்ணிலும் கடவுளைக் காட்டியது. எல்லோர்முகத்திலும் எல்லைமீறாத பரவசம் தாண்டவமாடியது. நடக்கும் அத்தனையையும், தளபதி மாதப்பதண்டநாயகர் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார். காலையில், பல்லக்கின்முன் கிளம்பும் போதுகூட, “இதென்ன கூத்து?” என மனதுக்குள் நகைத்துக் கொண்டவருக்கு, இப்போது நடப்பதைக்கண்டபின், வியப்புகூடியது.

ஒரேசமயத்தில், ராஜவிஸ்வாசத்தின் பெயராலும், பக்தியின் பெயராலும், மக்களை ஒன்றிணைத்துக் கட்டமைக்கிற மன்னரின் ஆழமான சிந்தனை, அவருக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அந்த ஆச்சர்யத்தோடு, அத்தனையையும் பார்த்தபடி, அவர் யோசித்தார்.“கருவறையிலிருப்பது பிரதிமையெனில் பிரதிமை. கடவுளெனில் கடவுள். அதுபோல, பல்லக்கில் இருப்பது, சிலையென நினைப்பவருக்கு சிலை. இளவரசரென நினைப்பவருக்கு இளவரசர். அதுவும், இந்த அருணசமுத்திரத்தின் கடவுளையே, தன்மகனென இந்த மக்களுக்கு நெருக்கமாய் காண்பிக்கிற மன்னரின் எண்ணம், எத்தனை அழகானது”.

“அந்த அருணாச்சலேஸ்வரரையே இளவரசராக கொண்டுவிட்ட இம்மக்களால், இப்போது புதிதாக கட்டப்படுகிற கோபுரங்களுக்கு, பாதுகாப்பிற்கு பாதுகாப்பு. பக்திக்கு பக்தி. இனி வடக்கத்தான் படை இந்த அருணையை நெருங்கமுடியுமா? நெருங்கினாலும், இப்போது கட்டுகிற கோபுரங்களின்மேல் கை வைக்கமுடியுமா? தங்கள் இளவரசனின் இல்லத்தை தொடவிடுவார்களா இம்மக்கள். ஆஹா… மன்னருக்குள் தோன்றியிருப்பது, என்னவொரு அற்புதமான யோசனை” என ஒரு தளபதியாய் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்த மாதப்பதண்டநாயகர். சட்டென “வாழ்க. எம்மன்னர் வீரவல்லாளன்.” என வாய்விட்டு கூவினார்.

ஆனால், அங்கு, காலையில் பூஜைகள் முடித்து, பஞ்சணையில் சாய்ந்தபடி, மௌனமாக கண்மூடிக் கொண்டிருந்த மன்னரின் எண்ணம், வேறாயிருந்தது. ஒரு வெள்ளித் தட்டு முழுதும் நறுக்கிய பழங்களோடு, மன்னர்முன் வந்து நின்ற சல்லம்மா, சின்ன கையசைப்பில், விசிறிக் கொண்டிருந்த பணிப் பெண்களை வெளியே அனுப்பினாள். அவர்கள் போனதும், நெற்றி முழுக்க திருநீறும், தோள்வரைபுரளும் தலைமயிர்கேசமும், சுத்தமாக மழிப்பதை நிறுத்தியிருந்த தாடிமயிருமாக, ஒரு ரிஷியினைபோல தோற்றமளித்த மன்னர் வீரவல்லாளனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தனக்குள் பேசிக் கொண்டாள்.

“இப்போதிருக்கின்ற இவர் சாயலில் ஒரு ஓவியத்தை, குரு மடத்தில் பார்த்திருக்கிறேன். சலனப்படுத்த முயலுகிற, உலக இயல்புகளை புறந்தள்ளிவிட்டு, கண்மூடிதியானிக்கும் சலனமற்ற ஒருமுனிவனின் ஓவியத்தை, அங்கு கண்டிருக்கிறேன். இவரும் அந்த முனிவனைபோல மெல்லமெல்ல மாறிக் கொண்டிருக்கிறார். வயது முதிர்ந்த சிங்கம் போல கம்பீரமாக காட்சியளித்தாலும், சாந்த மூர்த்தியாக அத்தனை கனிவாக மாறியிருக்கிறார்.”

“இவரின் உள்ளே வேறொன்று நடந்து கொண்டிருக்கிறதென தோன்றுகிறது. முன்புபோல அதிர்ந்து பேசுவதில்லை. பேச்சுகூட குறைந்துவிட்டதென அக்கா புலம்புகிறாள். அசைவம் சுத்தமாக நிறுத்தியாயிற்று. பூஜை செய்கின்ற நேரமும், கண்மூடி அமருகின்ற தியானநிமிடங்களும் அதிகரித்துவிட்டது. திறந்தவெளி முற்றத்துமேடையில் அமர்ந்துகொண்டு, அருணைமலையை பார்த்தபடி, பலநிமிடங்கள் அசையாமலிருக்கிறார். முன்புபோலில்லை. முகத்தில் தேஜஸ் கூடிக் கொண்டே போகிறது. சல்லம்மா யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கண்களை திறக்காமல், “வா சொக்கி’’ என மன்னர் அழைத்தார். சல்லம்மா அதிர்ந்துபோனாள்.

“வந்திருப்பது நானென்பதை, கண்களை திறக்காமல் எப்படி இவர் கண்டுபிடித்தார்?” என ஆச்சர்யமானாள். ஆச்சர்யத்தை கேள்வியாக்கினாள். நெருங்கியபடி. “எப்படி கண்டுபிடித்தீர்கள்?” என்றாள். கண்திறந்து பார்த்து புன்னகைத்த மன்னர், “ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வாசனையுண்டு. வேதியருக்கு ஒருவாசனை. போர் வீரனுக்கு ஒருவாசனை. கழனி வேலை செய்பவனுக்கு ஒருவாசனை. கோயில் அர்ச்சகருக்கு ஒருவாசனை. நாவிதனுக்கு ஒருவாசனை. குடிகாரனுக்கு ஒருவாசனை. உன் அக்காளுக்கு ஒருவாசனை. உனக்கு ஒருவாசனை என்றுண்டு. உள்ளே கூர்ந்து கவனிக்க, அந்த வாசனையை உணரமுடியும்.” என்றார்.

“அப்படியா? என் அக்காளின் வாசனையென்ன?” ஆர்வமாய் கேட்ட சல்லம்மாவின் கேள்விக்கு பதில்சொல்லாமல், மன்னர் தாடியை நீவிவிட்டபடி மௌனமாக இருந்தார்.“சரி, விடுங்கள். என் வாசனையெது?” அப்போதும் மௌனமாக இருந்தவரிடம், “சொல்லுங்களேன்” என சல்லம்மா கெஞ்ச, “எப்போதும் என்னால் மறுக்கவே முடியாத வாசனை, திருநீற்றின் வாசனை” என்ற மன்னர், அப்படி சொல்லும்போது, நெற்றியை தேய்த்து சைகைகாண்பித்து, அழகாக சிரித்தார்.மன்னரின் சைகைக்கு சேர்ந்து சிரித்த சல்லம்மா, மன்னர் சகஜமாகிவிட்டதை என்பதை புரிந்துகொண்டு, எதிரில் அமர்ந்தபடி, தயக்கத்தோடு, கேள்வியெழுப்பினாள்.

“இது எதன்பொருட்டு அரசே?
“எது சொக்கி?”
“இப்படி, ஈஸ்வர சிலாரூபத்தை, என்மகனென மக்களுக்கு அடையாளப்
படுத்துவது?” அவளை கூர்ந்து கவனித்த மன்னர் கேட்டார்,
“அது தவறா?”
“தவறில்லை. ஆனாலும் இந்த கற்பனைக்கு காரணமிருக்குமே?”
“ஏன் கேட்கிறாய்?”

“எனக்கென்னவோ நம் விருபாக்ஷவல்லாளனை புறக்கணிக்கிறீர்களோவென்று தோன்றுகிறது.” மன்னர் வீரவல்லாளன் பதில்பேசாது, மௌனமாக உத்திரம்வெறித்தார். பெருமூச்சு விட்டபடி சல்லம்மாவை நோக்கினார். மெல்லியகுரலில், “என்னால், என் மகனென்ற காரணத்தால், அவன்பட்டது போதாதா?” என முனங்கினார். சல்லம்மா ஆசனத்திலிருந்து சற்றுமுன்னேவந்து,
“என்னசொன்னீர்கள். எனக்கு புரியவில்லை” என்றாள்.

“துவார சமுத்திரத்துப் போரில் தோற்றபோது, வடக்கத்தானிடம் பணயக்கைதியாக சிக்கி இரண்டாண்டுகள் அவதியுற்றானே. அதுபோதாதா? அவனை முன்னிறுத்துவதால் இன்னும் படவேண்டுமா? அதுமட்டுமில்லாமல், நானிருக்கும்வரை இந்த அரசியல்பாரம், போர், எதிரிகளோடு சண்டை என்கிற அவஸ்தைகளையெல்லாம் என் தலை சுமக்கட்டும். அவனுக்கு வேண்டாம். அதுமட்டுமின்றி, நானொன்று சொல்லட்டுமா?”“சொல்லுங்கள்”“இந்த ஹொய்சாலத்தின்வம்சம் என்னோடு முடியட்டும். எனக்கு பிறகு, இந்த ஹொய்சாலம் நீடிக்க வேண்டாம்.”
‘`என்ன இப்படி பேசுகிறீர்கள்?” எக்கி, வேகமாக தன்வாயை பொத்த முனைந்த சல்லம்மாவின் கைகளை மன்னர் தடுத்தார்.

“நான் கூறுவதை நிதானமாக கேள். இப்படி வந்து உட்கார்” தன்னருகில் வந்தமர்ந்து, எங்கோ வெறித்தவளை, மன்னர் கன்னம்பிடித்து திருப்பினார். “சொக்கி, நீ எனக்கு நேசமானவள். உனக்கு என்னை புரியுமென்பதால் இதைசொல்கிறேன். எனக்கு போதுமென தோன்றுகிறது. ஒரு பூ உதிர்வதைபோல, கிளையிலமர்ந்தபடியே, பொத்தென கீழே விழுந்து உயிர்விடும் ஒரு பறவையைப் போல நகர்ந்துவிடலாமென தோன்றுகிறது. ஒவ்வொருமுறையும் கண்மூடி அமரும்போது, உள்ளுக்குள் தோன்றும் வெண்புகைபோல, கரைந்துவிடலாமென தோன்றுகிறது. அப்படி நான்முடியும்போது, ஈசனுக்கு மிக நெருக்கமானவனாக அறியப்படவேண்டுமென விரும்புகிறேன்.

(அடுத்த இதழில்…)

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Related Stories: