பக்கத்து வீட்டு வாலிபரை தாக்கி பைக்கை எரிக்க முயன்றவர் கைது


பெரம்பூர்: அயனாவரம் மயிலப்பா தெருவை சேர்ந்தவர் சையது உசேன் (30). இவர், கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரஞ்சித் குமார் என்பவர், அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் ஒரு பெண்ணிடம் வீட்டை காலி செய்யும்படி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது சையது உசேன் அங்கு வந்து, ஏன் இவ்வாறு ஆபாசமான வார்த்தைகளால் பேசுகிறீர்கள், என ரஞ்சித் குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், நான் அப்படி தான் பேசுவேன். நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ, என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரடைந்த ரஞ்சித்குமார், சையது உசேனை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சையது உசேனின் இரு சக்கர வாகனம் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார். உடனே, சையது உசேன் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ரஞ்சித்குமாரை தடுத்து நிறுத்தினர். பின்னர், சையது உசேன் இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்த ரஞ்சித்குமாரை (21) நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பக்கத்து வீட்டு வாலிபரை தாக்கி பைக்கை எரிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: