மிகவும் பிரசித்தி பெற்ற இந்நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் 50 கோடி பேர் வரை பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். வரும் 26ம் தேதியுடன் மகா கும்பமேளா நிறைவடைய உள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு வருவதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.
பிரயாக்ராஜ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 14ல் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நடைமேடை 14 மற்றும் 15ல் கூட்டம் அலைமோதியது. அந்த சமயத்தில், ஸ்வதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர தாமதம் ஏற்பட்டதால் அந்த ரயில்களில் செல்ல வேண்டிய பயணிகளும் காத்திருந்ததால் 12, 13, 14வது நடைமேடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திணறியது.
இரவு 9.55 மணி அளவில் நடைமேடை 14, 15ல் வேறு ரயில்கள் நின்றிருந்ததால், கடைசி நிமிடத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயில் எங்கு வரும் என்பதில் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பிளாட்பாரம் எண்கள் மாறி மாறி அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பலரும் நடைமேடை 16க்கு செல்ல படிக்கட்டுகளில் முண்டியடித்தனர். யாரும் ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் நிலைமை விபரீதமானது. எஸ்கலேட்டர் இருந்த பகுதியிலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் நடைமேடை 14, 15 பகுதிகளிலும், படிக்கட்டுகளிலும் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத்திணறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடினர். இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் 11 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள், 4 பேர் குழந்தைகள். 2 குழந்தைகள் 10 வயதுக்கும் உட்பட்டவர்கள். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதும், ரயில்வேயின் தவறான நிர்வாகமும்தான் பயணிகள் நெரிசலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கும்பமேளா செல்ல வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை இழந்து அவர்களின் சடலத்துடன் ரயில் நிலையத்தில் கதறி அழுத சம்பவங்கள் கடும் சோகத்தை ஏற்படுத்தின. இந்த துயர சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலால் நடந்த உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்க எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலால் மனவேதனை அடைந்தேன்.
தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலாக உள்ளேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். நெரிசல் நடந்த சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பிரயாக்ராஜுக்கு மக்களை அனுப்பி வைக்க 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 29ம் தேதி உபி அரசின் நிர்வாக குளறுபடிகளால் மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டு 30 பேர் பலியான நிலையில், தற்போது டெல்லியில் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக 18 உயிர்கள் பறிபோயிருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
* பிரேத பரிசோதனை இன்றி உடல்கள் ஒப்படைப்பு
விபத்தில் பலியான அனைத்து பயணிகளின் உடல்களும் நேற்று காலை 9 மணிக்குள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான பயணிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமலேயே அவற்றை உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
* விபத்தின் கோரக்காட்சிகள்
நெரிசல் ஏற்பட்ட படிக்கட்டு பகுதிகளிலும், நடைமேடை 14, 15களிலும் எங்கு பார்த்தாலும் பயணிகளின் செருப்புகள், கிழிந்த பைகள், பாதி சாப்பிட்டு போட்ட உணவுகள் சிதறிக் கிடந்தன. குழந்தைகளின் புத்தக பைகளும் கிடந்தன. அவற்றை அகற்ற பல மணி நேரம் ஆனதாக துப்புரவு பணியாளர்கள் கூறி உள்ளனர். அவர்கள் அளித்த பேட்டியில், ‘‘இது மிக மோசமான ஒன்று. எல்லா இடத்திலும் செருப்புகள், பைகள் கிடந்தன. மக்களுக்கு தங்கள் பொருட்களை எடுக்கக் கூட நேரமில்லை. அவர்கள் தங்கள் உயிருக்காக ஓடினார்கள்’’ என்றனர்.
* ரயில்வே விநோத விளக்கம்
நெரிசலுக்கு ரயில்வே நிர்வாகம் விநோதமான விளக்கத்தை அளித்துள்ளது. வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமன்சு உபாத்யாய் கூறுகையில், ‘‘எந்த ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. அனைத்து ரயில்களும் நேர அட்டவணைப்படி இயக்கப்பட்டன. ரயில் வரும் பிளாட்பார்ம்களும் மாற்றப்படவில்லை. சம்பவம் நடந்த போது படிக்கட்டில் இறங்கிய பயணிகள் சிலர் வழுக்கி விழுந்தால் நெரிசல் ஏற்பட்டது’’ என்றார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே தரப்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரும் சிசிடிவி பதிவுகளை வைத்து நெரிசலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
* 7 வயது மகளை பறிகொடுத்த தந்தை
மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த ஒபில் சிங் என்பவர் கூட்ட நெரிசலில் தனது 7 வயது மகள் ரியாவை இழந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘நாங்கள் 14வது பிளாட்பார்முக்கு செல்ல படியில் இறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்தோம்.
5, 6 படிகள் ஏறியிருப்போம், அதற்குள் சுமார் 6,000 பேர் இருந்த கூட்டத்தில் எனது மகள் சிக்கிக் கொண்டாள். அவள் தலையில் கூர்மையான ஆணி குத்தி ரத்தம் கொட்டியது. எனக்கு உதவ அதிகாரிகள் அங்கு யாரும் இல்லை. என்னிடம் இருந்த பணம், செல்போன் அனைத்தையும் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டனர். ஆம்புலன்ஸ் இல்லை. 2 கூலி தொழிலாளிகள் உதவியுடன் என் மகளை ஆட்டோவில் கொண்டு சென்றேன். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு என் மகள் இறந்து விட்டதாக கூறினர்’’ எனக் கண்ணீர் மல்க கதறினார்.
* ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் அளித்த பேட்டியில், ‘‘ரயில் தாமதத்தால் ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1,500 டிக்கெட் விற்றுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த முன்னேற்பாடுகளையும் ரயில்வே செய்யவில்லை. பாதுகாப்பு போலீசாரும் யாருமில்லை. பயணிகளே அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.
இங்கு 2 விதமான இந்தியா உள்ளது. அரசரின் நண்பர்கள் கும்பமேளாவில் குதூகலமாக நீராடுகின்றனர், சாமானிய மக்கள் செத்து மடிகின்றனர். ரயில்வே நிர்வாக சீர்கேட்டிற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். அப்பதவியை வகிக்க அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர் ராஜினாமா செய்யாவிட்டால், பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’’ என்றார்.
* பெட்டி தூக்குபவர்கள் சடலத்தை தூக்கினர்
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களையும், மயங்கியவர்களையும் ஆம்புலன்ஸ்களுக்கு கொண்டு செல்ல ரயில் நிலையத்தில் இருந்த போர்டர்கள் உதவினர். வழக்கமாக பெட்டிகளை தூக்கும் அவர்கள் சடலங்களை தங்களின் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சென்றனர். அதே போல, காயமடைந்தவர்களையும் தள்ளுவண்டி மூலம் வெளியில் நின்ற ஆம்புலன்ஸ்களுக்கு அழைத்துச் சென்றனர்.
* பலி குறித்த உண்மையை மறைக்கும் ஒன்றிய அரசு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘உயிரிழப்பு குறித்த உண்மையை மறைக்க முயற்சிக்கும் மோடி அரசின் செயல் அவமானகரானது, மிகவும் அசிங்கமானது. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்களை விரைவில் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்’’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த சம்பவம் ரயில்வே நிர்வாகத்தின் தோல்வி மற்றும் அக்கறையற்ற அரசு நிர்வாகத்திற்கு மற்றொரு உதாரணம். பிரயாக்ராஜுக்கு செல்ல ஏராளமான பயணிகள் குவிவதையொட்டி தேவையான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தவறான நிர்வாகம், அலட்சியத்தால் இனியும் ஒரு உயிர் கூட பலியாகாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
* மணிக்கு 1,500 டிக்கெட் விற்ற ரயில்வே நிர்வாகம்
ஸ்வதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர தாமதமானதால் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியிலிருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அப்படி தாமதம் ஏற்பட்ட சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், இப்படி அளவுக்கு அதிகமாக டிக்கெட் விற்கப்பட்டதே நெரிசலுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
* நெரிசலுக்கான காரணம்?
டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘பிரயாக்ராஜ் செல்ல 4 ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் 3 சிறப்பு ரயில்கள். பல ரயில்கள் நேர தாமதமாக வந்தன. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் நடைமேடை 14ல் இருந்து புறப்பட இருந்ததால் அங்கு பயணிகள் குவிந்திருந்தனர். இதற்கிடையே, நடைமேடை 16ல் பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் வருவதாக அறிவிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் பலரும் ஒரே நேரத்தில் நடைமேடை 16க்கு செல்ல முயன்றது நெரிசலுக்கு வழிவகுத்தது’’ என்றனர்.
* பயணிகள் கூறியது என்ன?
சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் கூறுகையில், ‘‘பல ரயில்கள் தாமதமாக வந்தன. இதனால் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. ரயில்கள் வரும் நடைமேடை எண்கள் அடிக்கடி மாற்றப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதுவரை வாழ்நாளில் பார்க்காத கூட்டம் கூடியிருந்தது. கடைசி நேரத்தில் வேறொரு தண்டவாளத்தில் இருந்து பிரயாக்ராஜ் ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டதால் பலரும் ஒரே நேரத்தில் செல்ல முயன்றபோது நெரிசல் ஏற்பட்டது’’ என்றனர்.
The post டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மகாகும்பமேளா பக்தர்கள் 18 பேர் பலி: பிளாட்பாரம் எண்ணை மாற்றி மாற்றி அறிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரிதாபம் appeared first on Dinakaran.