ஏரிக்கரை மீது சாலை அமைக்க மண்டல ஆணையாளர் ஆய்வு வந்தவாசி சுடுகாட்டுக்கு செல்ல

வந்தவாசி, பிப். 16: நகராட்சிகளின் வேலூர் மண்டல ஆணையாளர் லட்சுமி நேற்று வந்தவாசி நகராட்சி சார்பில் ₹5 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியினை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ₹31 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார். ஆரணி நெடுஞ்சாலை கோட்டை பகுதி, விநாயக முதலி தெரு, திருநீலகண்டர் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகநதி கரையில் அமைந்துள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

சவ ஊர்வலத்தின் போது ஏரிக்கரை மீது செல்ல முடியாத அளவிற்கு முள்புதர்கள் அடர்த்தியாக உள்ளதால் சவ ஊர்வலம் எடுத்துச் செல்வதில் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏரிக்கரை மீது சாலை அமைத்து தர வேண்டி தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரி வந்த நிலையில் அங்கு சாலை அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் இதற்காக நகராட்சி மூலமாக ₹4.20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதால் சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்கிய உடன் அரசு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் வேலூர் மண்டல ஆணையாளர் லட்சுமி கூறியதாவது: நகராட்சி மூலமாக நாய் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இது தற்காலிக பணியாக இருந்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அறுவைச்சிகிச்சை செய்ய ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக திருவண்ணாமலையில் அறுவை சிகிச்சை கூடம் உள்ளன. அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் வந்தவாசி நகர பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை 20 நாட்களுக்கு பராமரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடு செய்த உடன் விரைவில் நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும். மேலும் கடந்த ஆண்டு 70 சதவீதம் வரை வசூல் செய்து நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி உள்ளனர்.

மேலும் இந்தாண்டு 85 சதவீதமாக வரிவசூல் உயர்ந்தால் தான் மத்திய அரசு வழங்கும் நிதி கிடைக்கும். ஆகவே அனைவரும் வரி வசூலில் முழு கவனம் செலுத்தி 100 சதவிகித இலக்கை எட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கி உள்ளேன் என்றார். நகராட்சித் தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மனுவை மண்டல ஆணையாளரிடம் வழங்கினர். அப்போது மேலாளர் ரவி, பொறியாளர் கோபு, கணக்காளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

The post ஏரிக்கரை மீது சாலை அமைக்க மண்டல ஆணையாளர் ஆய்வு வந்தவாசி சுடுகாட்டுக்கு செல்ல appeared first on Dinakaran.

Related Stories: