கலசபாக்கம், பிப். 16: துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கிருபானந்தன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் சத்தியமூர்த்தி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் துரைக்கண்ணு, பிடிஏ தலைவர் அறிவழகன், மேலாண்மை குழு தலைவர் பிரியா குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போளூர் டிஎஸ்பி மனோகரன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த ஆசிரியராக பேராசிரியராக அறிவியல் வல்லுனராக சிறந்த சாதனையாளராக விளங்க வேண்டும். பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இலக்குடன் செயல்பட்டு மாணவர்கள் வெற்றி இலக்கினை அடைய வேண்டும். அனைத்து மாணவர்களிடமும் தனி திறமைகள் உள்ளன. அதனை முழுமையாக பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. உங்களால் கண்டிப்பாக வரலாற்றுச் சாதனை படைத்து சிறந்த மாணவர்களாக விளங்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் தேவன் பாபு, சாந்தி, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியை ஜெயபாரதி நன்றி கூறினார்.
The post அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் போளூர் டிஎஸ்பி அட்வைஸ் அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.
