உடுமலை, பிப். 15: கொங்கல்நகரத்தில் மார்ச் 14-ம்தேதி கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெறும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உடுமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளுக்கு விதித்த தடையை நீக்க கோரி, வரும் மார்ச் 14-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல்நகரத்தில் கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
சீமான்,அண்ணாமலை போன்ற தலைவர்கள் வருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அனைத்து கட்சி தலைவர்களையும் இந்த மேடையில் நிறுத்துவதுதான் எங்கள் நோக்கம். இந்த கருத்தரங்கம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் இருக்கிறது.தாய்ப்பாலில் உள்ள போலிக் ஆசிட் கள்ளில் இருக்கிறது.அதேநேரத்தில், அயல்நாட்டு மதுக்களில் போதைக்கு தேவையான ஆல்கஹாலை தவிர ஏதும் கிடையாது.
கள்ளை விட 10 மடங்கு அதிகமாக டாஸ்மாக் மதுவில் ஆல்கஹால் உள்ளது. கள்ளை மோரோடு, பழைய சோறு, தேன், பழச்சாறு ஆகியவற்றோடு சேர்த்து பருக வேண்டும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சாலை விபத்துகளும், குற்றங்களும் குறைந்துவிட்டதாக ஆய்வு கூறுகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்க அந்த மாநில அரசு மறுத்துவிட்டது. ஆனால் இங்கு அரசு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கொங்கல் நகரத்தில் கள் விடுதலை கருத்தரங்கம்: மார்ச் 14ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.