திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம், பிப். 14: கேரள போலீசின் முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தகவல் வந்தது. அதில், கொச்சி சர்வதேச விமான நிலையம், திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கொச்சி விமான நிலையத்திற்கும், திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் அங்கு தீவிர பரிசோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இந்த 2 இடங்கள் தவிர கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் தெலங்கானா மாநிலத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் குறித்த விவரங்கள் கிடைத்து உள்ளதாகவும், அவரை கைது செய்வதற்காக தெலங்கானா செல்ல உள்ளதாகவும் கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: