திருமண மண்டபத்தில் ரூ4.20 லட்சம் மொய் பணம் திருட்டு


சென்னை: வேளச்சேரியை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (32). இவரது தங்கையின் திருமணம் நேற்று சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. வரவேறப்பு நிகழ்ச்சியில் வந்த மொய் பணம் ரூ4 லட்சத்தை ஆகாஷ்குமார் தம்பி நேர்த்திக் கையில் வைத்திருந்தார். மணமக்களை பார்க்க நெருங்கிய உறவினர்கள் வந்ததும், நேர்த்திக் அவர்களை மணமக்களிடம் அழைத்து செல்ல மொய் பணத்தை அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொய் பணம் மாயமாகி இருந்தது. அதேபோல், மணமகன் வீட்டின் மொய் பணம் ரூ20 ஆயிரமும் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் மணமக்கள் இருந்த மேடைக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. பிறகு 2 மர்ம நபர்களும் ஒரு ஆட்டோ மூலம் திருமண மண்டபத்தில் இருந்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.அதைதொடர்ந்து போலீசார் 2 மர்ம நபர்கள் ரூ4.20 லட்சத்துடன் தப்பி சென்ற ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருமண மண்டபத்தில் ரூ4.20 லட்சம் மொய் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: