கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதி சடங்கில் கானா பாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்: தமிழ்நாடு குத்துசண்டை வீரர் வெட்டிக் கொலை: முக்கிய குற்றவாளி உட்பட 9 பேர் 4 மணி நேரத்தில் அதிரடி கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு பகுதியில் ராஜேஷ் மற்றும் ராதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனுஷ்(24) என்ற மகன் உள்ளார். ஒரே மகனான இவர், சிறு வயதில் இருந்து பெரிய குத்துச்சண்டை வீரராக வர வேண்டும் என்ற ஆசையில் கடும் பயிற்சி எடுத்து வந்தார். அதே நேரம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அவர், தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதி சடங்கு ஒன்றில் கானா படுவதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தனுஷ் மற்றும் அவரது தந்தை ராஜேஷ் ஆகியோர் ெசந்தில் என்பவரை கடுமையாக தாக்கினர். இதனால், செந்தில் அளித்த புகாரில் தனுஷ் மற்றும் அவரது தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. காவல்துறையில் சேர வேண்டும் என்ற ஆசையில் தனுஷ் தயாராகி வந்த நிலையில் இந்த வழக்கால் அவரது கனவு தகர்ந்தது.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் செந்திலை தாக்கிய வழக்கின் விசாரணை தற்போது வர உள்ளதாக கூறுப்படுகிறது. அடி தடி வழக்கு தனுஷ் மீது உள்ளதால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் கருதினர். இதனால் புகார் அளித்த எதிர் தரப்பை சேர்ந்த செந்தில் என்பவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர் வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ்க்கும் செந்திலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் தனுஷ் உன்னை விடமாட்டேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனுஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தனது வீட்டின் அருகே நின்று செல்போனை பார்த்து கொண்டு தனது நண்பரான அருண் என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று தனுஷை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் வலி தங்க முடியாமல் தனுஷ் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் தனுஷை கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது நண்பர் அருண் மர்ம கும்பலை தடுக்க முயன்றார். அப்போதும் அவரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.தனது மகனை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டியதை நேரில் பார்த்த அவரது தாய் ராதா பின்னால் ஓடி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது மகனை பார்த்து கதறி அழுது துடித்தது அங்கு இருந்தவர்கள் கண்களில் கண்ணீர் வர வழைத்தது.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைத்தனர். தனிப்படைகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் உதவியுடன் கொலை நடந்த 4 மணி நேரத்தில் தனுஷை படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான செந்தில்(24), அவரது நண்பர்களான மோகன், டேவிட், விஸ்வா, விஷால், தீபக், சுரேஷ்குமார் உட்பட 9 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அரிவாள் உட்பட 9 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.முக்கிய குற்றவாளி செந்திலிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணம்பேட்டையில் கடந்த ஆண்டு இறுதி சடங்கில் கானா படுவதில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் பேனர் வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் தனுஷை படுகொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதி சடங்கில் கானா பாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்: தமிழ்நாடு குத்துசண்டை வீரர் வெட்டிக் கொலை: முக்கிய குற்றவாளி உட்பட 9 பேர் 4 மணி நேரத்தில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: