இதையடுத்து உயர்நீதிமன்றத்தின்படி சிறப்பு அமர்வு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு பாலாறு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவித்த தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உரிய இழப்பீட்டை வழங்கவும், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழுவுநீரை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்ற தொழில்நுட்பத்தை நிறுவ வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சுற்றுசூழல் கண்காணிப்பு குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். இதில், நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரும் பாதிப்படைகின்றனர். தொழிற்சாலைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இணைந்து ஆலோசனை நடத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு புதிய கமிட்டியை உருவாக்க வேண்டும்.
மேலும் உத்தரவு பிறப்பித்த இன்றைய நாள் முதல் அடுத்த 6 வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தொகையை பாலாற்றில் கழிவுகளை கலந்த தொழிற்சாலைகளிடம் இருந்து மாநில அரசு வசூல் செய்து கொள்ளலாம். மேலும், ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து பாலாற்றில் கழிவுநீரை கலந்தால் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்யலாம். 4 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறூ அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜே.பி.பரிதிவாலா, ‘பாலாற்றை மாசுபடுத்தும் விவகாரத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் கூட சம்பந்தப்பட்டவர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம்’ என்றார்.
The post பாலாற்றை மாசு படுத்துபவர்களுக்கு திகார் சிறைதான்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.
