பெரணமல்லூர், ஜன.29: தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நேற்று பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வள மைய மேற்பார்வையாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செண்பகவல்லி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ஆசிரியர்கள் சமுதாயத்தின் கண்ணாடி போன்றவர்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பாட இடைவெளியின் போது பள்ளியின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வரும் பெண் குழந்தைகளுக்கு உரிய அறிவுரைகளை நாம் வழங்க வேண்டும். முக்கியமாக குட் டச், பேட் டச் குறித்து அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். வெளியிடங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி குழந்தைகள் தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து முகாமில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உதயசூரியன், ஆசிரிய பயிற்றுநர் அப்பாஸ், சமூக நலத்துறை கருத்தாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் மீதான துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வட்டார அளவில் பங்கு பெற்ற 38 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
The post பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் வட்டார கல்வி அலுவலர் பேச்சு பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
