பண்டாசுர வதோத்யுக்த ஸக்தி ஸேனா ஸமன்விதா
பண்டாசுரன் ஏன் இவ்வளவு அசுரத்தன்மையோடு இருக்கிறானெனில், அவன் சாம்பலிலிருந்து உற்பத்தியானான் என்று பார்த்தோம். பகவானுடைய நெற்றிக்கண்ணிலிருந்துதான் உற்பத்தியானான் என்று பார்த்தோம். பகவானுடைய கோபாக்னிதான் மன்மதனை எரித்தது. அந்த கோபாக்னிக்கு இருக்கின்ற குரூரத்தன்மை இருக்கிறதல்லவா… அது குரூரத்தன்மை முழுக்க இவனுக்கு வந்துவிட்டது. அதனாலேயே அவனுக்கு குரூர பண்டன் என்று பெயர். இருப்பதிலேயே குரூரமானவன். இப்படிப்பட்ட ஒரு அசுரன் உற்பத்தியானான். இந்த ஜந்துவிற்குத்தான் பண்டாசுரன் என்று பெயர்.
இப்போது அசுரர்களுக்கெல்லாம் வழக்கம் உண்டு. இவன் என்ன செய்கிறான் எனில்… அசுரத்தன்மை உள்ளவர்கள் கடுமையான தவத்தையும் செய்வார்கள். அதேபோல இவனும் கடுமையான தவத்தையெல்லாம் செய்கிறான். யாரையுமே வெல்ல முடியாத அளவுக்கு வளர்ந்து விடுகிறான். தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் என்று எல்லா உயிர் வர்க்கங்களையும் துன்புறுத்த ஆரம்பிக்கின்றான். அப்படி துன்புறுத்தும்போது செய்யக் கூடிய பெரிய விஷயம் என்னவெனில், உயிர்களினுடைய இந்திரியர்களின் பலத்தை முழுவதும் இவன் அபகரித்து விடுகிறான். உயிர்களின் இந்திரிய பலத்தை அபகரிக்கிறான் என்று சொல்லும்போது நாம் முதன்முதலாக பார்த்த நாமங்களான சிதக்னி குண்ட சம்பூதாவிற்கு போய்விட வேண்டும். சிதக்னி சம்பூதா நாமம் வழியாக நாம் என்ன பார்த்தோமெனில், தேவர்களெல்லாம் யாகம் செய்து அந்த சிதக்னியில் அம்பாள் வந்தாள் என்று பார்த்தபோது, அப்போது சூட்சுமமாக உள்முகமாக ஒரு விஷயமும் பார்த்தோம்.
தேவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் யாரெனில் அவர்கள் அனைவருமே நம்முடைய இந்திரியங்கள். நம்முடைய இந்திரியங்களெல்லாம் எப்போது உள்முகமாக அந்தர்முகமாக திரும்பி இருதய ஸ்தானத்தில் யாகம் செய்கிறதோ அங்கு அம்பாள் சித் சொரூபமாக ஆவிர்பவிப்பாள் என்று பார்த்தோம்.
இப்போது இவன் என்ன செய்கிறானெனில், தேவர்களுடைய பலத்தை எல்லாம் அபகரிக்கிறான் என்று சொல்லும்போது அதனுடைய உள்ளர்த்தம் என்னவெனில், நம்முடைய இந்திரிய பலத்தை அபகரிக்கிறான். இந்திரிய பலத்தை இவன் அபகரிக்கும்போது என்ன நடக்கும். நமக்கு ஒரு கேள்வி வரலாம். இந்திரியங்களினால்தான் நாம் சம்சார உலகிற்குள் போய்க் கொண்டே இருக்கிறோம். அப்போது இந்திரிய பலத்தை நமக்கு அபகரித்துவிட்டால் நமக்கு நல்லதுதானே. இந்திரியர்களெல்லாம் நமக்கு வேலை செய்வதுனாலதான்… கர்மேந்திரிய ஞானேந்திரிய நம்முடைய மனசினுடைய சேஷ்டைகளினால்தான் சம்சார பந்தத்திற்குள் நாம்போய் சிக்கிக் கொண்டே இருக்கிறோம்.
இப்போது இந்த இந்திரியங்களின் பலத்தை ஒருவன் அபகரித்து விட்டால் என்று வைத்துக் கொள்வோம். அது நமக்கு நல்லதுதானே… நாம் சம்சாரத்திற்குள் போக மாட்டோம் அல்லவா. இல்லை. இந்திரியங்களை பலமிழக்கச் செய்வது, மனதை பலமிழக்கச் செய்வது நமக்கு விஷயம் கிடையாது. இந்திரியங்களையும் மனதையும் உள்நோக்கித் திருப்ப வேண்டும். உள்நோக்கி திருப்புவதற்கு நமக்கு அபரிமிதமான பலம் தேவை. வெளிநோக்கி திருப்புவதற்கு இருக்கக் கூடிய பலத்தைவிட உள்நோக்கித் திருப்புவதற்கு பலம் அதிகமாக தேவை. அப்போது இந்திரியத்தையும் பலத்தையும் அவன் ஏன் அபகரிக்கிறானெனில், பலத்தை அபகரித்தால் நம்மால் அந்தர்முகமாக போக முடியாது. அப்போது எவன் அந்தர்முக விருத்தியை தடுக்கிறானோ அவனே பண்டாசுரன். அந்த அந்தர்முக விருத்தியை தடுக்கின்ற பண்டாசுரனை சம்ஹரிப்பதற்காக சக்தி சேனா சமன்விதா என்று சக்தி சேனையோடு வருகிறாள்.
அவன் அந்தர்முக விருத்தியை தடுப்பதை, நம்மால் கணக்கிடபட முடியாத வழிகளில் அவன் அதைச் செய்வான். (he does it in various ways.) அதனால் சக்தி சேனையோடு அம்பாள் அங்கு ஆவிர்பவிக்கிறாள். இப்படி பூர்ணமாக சைன்னியமாக அவள் ஆவிர்பவிப்பது எதற்காகவெனில், இவன் எப்படியெல்லாம் செயல்படுவான். எந்தெந்த வழிகளிலெல்லாம் செயல்படுவான் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே, இவன் எந்தெந்த வழியில் செயல்பட்டாலும் அவனை அந்தந்த வழிகளில் சென்று சம்ஹாரம் செய்வதற்காக வேண்டி ஏராளமான சக்தி சேனைகளோடு அம்பாள் அங்கு ஆவிர்பவிக்கிறாள். இந்த சக்தி சேனையாக இருப்பதும் அவள்தான்.
அங்கு மகாராக்ஞீயாக இருப்பதும் அவள்தான். இந்த சக்தி சேனையில் இருக்கக் கூடிய ஒவ்வொன்றும் அவள்தான். இந்த சேனையில் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அவள்தான். அதனால்தான், பண்டாசுர வதோத்யுக்த ஸக்தி ஸேனா ஸமன்விதா… என்று வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள்.
இதற்கான கோயிலாக நாம் மன்மதனை அதாவது காமதகன மூர்த்தியாக அருள்பாளிக்கும் கொற்கை என்கிற தலத்தை சொல்லலாம். இந்த தலத்தை குறுக்கை என்றும் கொற்கை என்றும் வழங்கப்படும் திருக்கொருக்கையாகும்.
யோக நிலையில் இருந்த சிவபெருமானின் தவத்தைக் கலைத்து அவர் மூலமாக அசுரர்களை வதம் செய்ய ஒரு குமாரனைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற காரணத்தால் தேவர்கள் மன்மதனை அனுப்ப, அவன் தன் கரும்பு வில்லால் கணை தொடுக்கக் கண் திறந்து பார்த்த சிவன் தம் மூன்றாம் கண்ணையே கனலாக்கிக் காமனை எரித்த தலம் இதுவே. பின்னர், அவன் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இரங்கி அவனை உயிர்ப்பித்ததும் இத்தலமே. புலன்களைத் வெளிப்புறமாக தாறுமாறாக அலையவிட்டு தேவையற்ற இச்சைகளை தூண்டி ஜீவனை அழிக்கும் காமனை எரித்து வீரச் செயல் புரிந்ததால் வீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எனவே, சிவன் நிகழ்த்திய அஷ்ட வீரட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தல மூலவர் வீரட்டேசுவரர் என்றானார். உற்சவரின் பெயர் யோகேஸ்வரர் என்பதாகும். காமனை எரித்த சிவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை என்பதாகும்.
கோயிலுக்கு மேற்குப் புறம் சுமார் அரை கி.மீ. தொலைவில் காமனை எரித்த இடம் இருக்கிறது. அங்கு இப்போதும் காணப்படும் சாம்பல், மன்மதனை எரித்த சாம்பலே என்பது ஐதீகம். இந்த தலமான குறுக்கையைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு தொடர்புற்றுள்ளன. சிவபெருமானின் தவத்தை கலைக்க முனைந்து மன்மதன் தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட ஊர் கங்கணப்புத்தூர். பாலருந்தியது பாலாக்குடி. வில்லெடுத்த ஊர்வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 26ஆவது தலமாகும்.
(சுழலும்)
The post மகோன்னத சக்தியை அளிக்கும் அம்பிகை appeared first on Dinakaran.
