கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்: சீமான் கட்சியினர் 1000 பேர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: இன்றைக்கு கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் 200 அல்ல, 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த (நாம் தமிழர் கட்சியினர்) ஒரு மண்டல செயலாளர், 8 மாவட்ட செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 சார்பு அணி நிர்வாகிகள், 6 தொகுதி செயலாளர்கள், 3 எம்.பி. வேட்பாளர்கள், 6 எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி செய்திருந்தார். திமுகவில் இணைந்தவர்களை கட்சி துண்டு அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். முதல்வருக்கு பெரியார் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக என்பது, ஏதோ நேற்று முளைத்த காளான் அல்ல. 1949ல், திமுகவை அண்ணா உருவாக்கிய நேரத்தில், வடசென்னை பகுதியில் இருக்கும் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் துவக்கி வைத்தபோது அவர் சொன்னார், ”திமுக என்பது, ஆட்சிக்காக அல்ல; ஆட்சிக்கு வர வேண்டும்- பதவியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல; மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்; ஏழை எளியவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகப் பாடுபட வேண்டும்; ஒட்டுமொத்தத் தமிழினத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த இயக்கம் துவக்கப்படுகிறது” என்று அண்ணா அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

அதற்குப் பிறகு, படிப்படியாக திமுக வளர்ந்து வளர்ந்து, 1957ம் ஆண்டு, முதல் தேர்தல் களத்திலே நாம் ஈடுபட்டு வருகிறோம். 1949ல் தொடங்கி, 1957ல்தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சி, எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. காரணம், அவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்கு தயாராக இல்லை. அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, ஒரே ஒரு பதில்… இங்கே கூடியிருக்கும் நீங்கள் தான் பதில். இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்று சொன்னாலே, சிலருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆவேசம் வருகிறது. ஆவேசம் வரட்டும்… கோபம் வரட்டும்… அவ்வாறு சொல்லச் சொல்லத்தான், திராவிட மாடல் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். நீங்கள் சொல்லச் சொல்லத்தான், திமுக மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆளுநர், தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறாரே-நம்மை எதிர்த்துப் பேசிக்கொண்டே இருக்கிறாரே-திராவிட என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே-ஆரியத்திற்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே-இவ்வாறு மதத்தை மையமாக வைத்து பேசிக்கொண்டு இருக்கிறாரே-என்றெல்லாம் வருத்தப்படுவது உண்டு. அவர் பேசட்டும். அவ்வாறு, பேச பேசத்தான் நமக்கு ஆதரவு அதிகமாகிறது.

அதனால் சில பேர், கவர்னரை மாற்றுங்கள்… மாற்றுங்கள் என்று சொல்வார்கள். இதுவரை சட்டமன்றத்தில் நாங்கள் கவர்னரை மாற்றுங்கள் என்று தீர்மானம் போட்டிருக்கிறோமா? அவ்வாறு நாங்கள் தீர்மானம் போடவில்லை. அவர் இருக்க வேண்டும். இருந்தால்தான் திமுக இன்னும் வளர்கிறது. அடுத்த கவர்னர் உரைக்கும் அவர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம். அதைப் படிக்காமல் அவர் வெளியே செல்ல வேண்டும். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்; அதை மக்களும் பார்க்க வேண்டும். நான் பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடத்திலும் இங்கிருந்து ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து நீங்கள் கவர்னரை மாற்றவே மாற்றாதீர்கள். அவரே இருக்கட்டும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பேசிக் கொண்டே இருந்தால்தான், மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

நான் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கொண்டிருக்கிறேன். அவ்வாறு செல்கிறபோது பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள் வரிசையாக இரண்டு பக்கமும் நின்று கொண்டு என்னை வரவேற்கும் காட்சியைப் பார்க்கிறபோது, மீண்டும் சொல்கிறேன்… நிச்சயமாக ஏழாவது முறையாகவும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்ற உறுதியையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன். நம்முடைய சாதனைகளை-திட்டங்களை எண்ணிப் பார்க்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய ஆட்சியின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாகப் பயன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், பேருந்தில் இலவசமாக விடியல் பயணம் செய்யலாம். அது ஒரு அருமையான திட்டம்.

அதேபோன்று, கலைஞர் உரிமைத் தொகை-ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தத் திட்டத்தில் இன்னும் அங்கங்கு குறை இருக்கிறது. அந்தக் குறையும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மாதாமாதம் ஆயிரம் ரூபாய் ‘புதுமைப்பெண்‘ என்ற திட்டம், மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், அதேபோல், ‘காலை உணவுத் திட்டம்‘ என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில்-தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கிறது. ஒன்றரை வருடத்தில் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். யார் யாரோ, எதை எதையோ பேசிக் கொண்டிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நம் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதை நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற சூழல் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்வரும், இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், எம்எல்ஏ, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி ஆகியோர் உடனிருந்தனர். அடுத்த கவர்னர் உரைக்கும் அவர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம். அதைப் படிக்காமல் அவர் வெளியே செல்ல வேண்டும். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்; அதை மக்களும் பார்க்க வேண்டும்.

* கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.
* நாங்கள் தான் அடுத்த முதல்வர் என பிதற்றுகிறார்கள்.
* அது எந்தக் கட்சி, எந்த தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை.
* அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய கவுரவத்தை குறைக்க விரும்பவில்லை.

The post கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்: சீமான் கட்சியினர் 1000 பேர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: