பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 26 ரன்னில் வெளியேற அபிஷேக் சர்மா 34 பந்தில், 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 79 ரன் விளாசினார். சூர்யகுமார் டக்அவுட் ஆக, நாட் அவுட்டாக திலக்வர்மா 19, பாண்டியா 3 ரன் எடுக்க 12.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: டாஸ் வென்ற பிறகு களத்தில் வெளிப்படுத்திய சக்திதான் வெற்றிக்கு காரணம். பவுலர்கள் நல்ல திட்டங்களை தீட்டி களத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் கேக்கில் இருக்கும் செர்ரி போல் இருந்தது. புதிய பந்தில் பந்து வீசவேண்டும் என்பதுதான் பாண்டியாவுக்கு நாங்கள் கொடுத்திருக்கும் பொறுப்பு.
இதன் மூலம் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை சேர்க்க முடியும். எப்படி பந்துவீச வேண்டும் என வருண் சக்கரவர்த்தியும் பயிற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அர்ஷ்தீப்சிங்கும் தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலே பெற்று தந்தார். பீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டோம். கடினமான கேட்ச்களை வெற்றிகரமாக பிடிப்பது தான் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும், என்றார். ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி கூறுகையில், இந்த ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியும். ஆனால் சில லெந்தில் பந்து வீசினால் அது நிச்சயம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் உதவிகரமாக அமையும். இங்கிலாந்து வீரர்கள் பெரிய ஷார்ட் ஆட ஏதுவாக பந்து வீசக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஈடன் கார்டனில் பந்துவீசுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதுவும் பட்லர் போன்ற வீரர்களுக்கு பந்துவீசுவது கடும் நெருக்கடியாக இருக்கும். பட்லருக்கு பந்துவீசும்போது ஒருவித படபடப்பு இருந்தது. இந்த போட்டியில் எனது பந்துவீச்சுக்கு நான் 10க்கு 7மதிப்பெண் தான் கொடுப்பேன். இன்னும் நிறைய விஷயங்களை நான் செய்ய வேண்டும்’’ என்றார்.
அடுத்த போட்டியில் நன்றாக ஆடுவோம்;
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது: ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதை நான் எதிர்பார்க்க வில்லை. இது நிச்சயம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் தான். ஆனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டனர். இது நிச்சயம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் தான். எங்கள் அணியில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்க நினைத்தோம். ஆனால் இன்று எங்களால் அதை செய்ய முடியவில்லை. இந்தியா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தது. அடுத்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.
இன்று சென்னை வருகை;
2வது டி.20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் (25ம் தேதி ) நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வருகின்றனர். நாளை அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 2018ம் ஆண்டுக்கு பின் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டி.20 போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
The post முதல் டி.20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; பட்லருக்கு பந்துவீசும்போது `படபடப்பாக’ இருந்தது: ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி பேட்டி appeared first on Dinakaran.
