அலங்காநல்லூரில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள் : தங்க மோதிரம் வென்ற விஜயபாஸ்கரின் காளை; அடங்க மறுத்த நடிகர் சூரியின் கருப்பன்!!

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்துள்ளார். அவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்பு நல்கினர். 10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 13 பேர் காயமடைந்தனர்.மாடுபிடி வீரர் 6, மாட்டின் உரிமையாளர்கள் 4, பார்வையாளர் 3 என மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். காளை முட்டி காயமடைந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 13 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.7 பேர் எடை குறைவு, 5 பேர் போலி ஆவணங்கள் வழங்கியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல் சுற்று முடிவில் சூர்யா 3 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார். தினேஷ், கண்ணன் மற்றும் கெளதம் ஆகியோர் தலா 2 காளைகளை அடக்கி 2வது இடத்தையும் பிடித்தனர். நடிகர் சூரியின் காளையான கருப்பணை யாராலும் அடக்கப்படவில்லை. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான வேடிக்கையை காட்டி தங்க மோதிரத்தை வென்று அசத்தியது. இதனையடுத்து தொடங்கிய 2வது சுற்றில் அபி சித்தர் 9 காளைகளையும், விஜய் 6 காளைகளையும், விக்னேஷ் மற்றும் அருன் குமார் தலா 4 காளைகளையும் அடக்கினர். இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3வது இடத்தை பிடித்த மாடுபிடி வீரரான கார்த்தி என்பவரை மாவட்ட ஆட்சியர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து 3ம் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post அலங்காநல்லூரில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள் : தங்க மோதிரம் வென்ற விஜயபாஸ்கரின் காளை; அடங்க மறுத்த நடிகர் சூரியின் கருப்பன்!! appeared first on Dinakaran.

Related Stories: