தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டம் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை

சென்னை: மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கடந்த ஜன.10ம் தேதி அளித்த பேட்டியில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியிருந்ததால், இத்திட்டம் கைவிடப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கு உடனடியாக 11ம் தேதி ஏற்கனவே நான் ஒரு விரிவான மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் மதுரை-தூத்துக்குடி (வழி அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.

எனவே, இத்திட்டத்தினை கைவிடுவது குறித்து எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஜன.10ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட போது, அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலையினாலும், தேசிய மற்றும் மாநில ஊடகங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே பிரச்சினைகள் குறித்து பல கேள்விகளைக் கேட்டதால், ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி பாதைத் திட்டம்,

நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், ஒன்றிய ரயில்வேத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

The post தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டம் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: