கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு இறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதில், பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப்போக்கு 20 சதவீதம், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் 19 சதவீதம், செப்சிஸ் 10 சதவீதம், இருதய பாதிப்பு 9 சதவீதம், கருக்கலைப்பு 4 சதவீதம், பிற பாதிப்புகள் 38 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் 74.25 சதவீதம் ஏற்பட்டு வருகிறது. 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 72 சதவீத இறப்புகள் கிராமப்புறங்களிலும், 28 சதவீதம் இறப்பு நகரங்களிலும் ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதேபோல், கர்ப்பகால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளை கண்டறிந்து, மகப்பேறு மரணம் ஏற்படாத வகையில், ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மகப்பேறு மரணம் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 டிசம்பர் மாதம் வரை 48.2 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் முதல் கடந்த டிசம்பர் மாதம் வரை 40.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மகப்பேறு மரணம் 17 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
சீமாங் மையங்களில் அதிக ஆபத்து உள்ள தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தயாராக இருந்து வருகிறது. தற்போது அதிக ஆபத்துள்ள பிரசவங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது. கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய சுய விவரங்களை பிக்மி இணையதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 20 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2023ம் ஆண்டை காட்டிலும் 2024ல் தமிழகத்தில் மகப்பேறு மரணம் மேலும் 17 சதவீதம் குறைப்பு: பிக்மி இணையதளத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளும் அதிகரிப்பு appeared first on Dinakaran.