மதுரை-தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு கைவிடச் சொல்லவில்லை: குழப்பம் ஏற்பட்டு விட்டது என ஒன்றிய அமைச்சர் விளக்கம்

மதுரை: மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு கைவிடச் சொல்லவில்லை என ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். கடந்த ஜனவரி 10ம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அது கைவிடப்பட்டது’’ என்று அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்தார். இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் ஒருபோதும் கூறவில்லை. கூடுதல் நிதி ஒதுக்கவே கேட்கப்பட்டது என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ரயில்வே அமைச்சரின் பேட்டியை கையில் எடுத்துக் கொண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாஜ தலைவர் அண்ணாமலையும், அதிமுக தரப்பிலும் அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், புதிய ரயில் திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் திடீர் பல்டி அடித்துள்ளார். ‘‘ரயில்வே அமைச்சரிடம் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி தனித்தனியாக கேள்விகளை ஒரே நேரத்தில் நிருபர்கள் கேட்டதால், அதிக சத்தம், குழப்பம் ஏற்பட்டு விட்டது. மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது ஒன்றிய அமைச்சரின் காதில் தனுஷ்கோடி என்று பதிவாகியது. நில ஆர்ஜிதம், சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடும் கோரிக்கை வந்ததால், மாற்றி கூறி விட்டேன்’’ என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது புது விளக்கமளித்துள்ளார்.

The post மதுரை-தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு கைவிடச் சொல்லவில்லை: குழப்பம் ஏற்பட்டு விட்டது என ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: