திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர், தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

மேலும், கலைஞரால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது, கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” 2024-இல் தோற்றுவிக்கப்பட்டு, முதன் முறையாக இவ்விருது முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், மெய்யநாதன், மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: