திருப்பூர், ஜன.9: இந்திய ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்களின் கூட்டமைப்பு ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்துடன், ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும், இந்திய ஏற்றுமதி அபிவிருத்தி கழக கூட்டமைப்பின் தென் பிராந்திய உறுப்பினருமான சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஏற்றுமதி கடன் இடர் மேலாண்மை மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் இசிஜிசியின் பங்கு குறித்தும், இசிஜிசி ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதுடன் வெளிநாட்டு வர்த்தகர்களின் நிதி பின்னணியை பற்றி ஆய்வு செய்து ஏற்றுமதியாளர்களை சரியாக வழி நடத்துகிறது. கடன் உத்தரவாத கழகம் இசிஜிசி ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி அபாயங்களை குறைப்பதோடு ஏற்றுமதிக்கு பெரும் கடன் வசதி வழிமுறைகளை எளிதாக்குகிறது. இவை ஏற்றுமதியாளர்களுக்கு சீரான பணப்புழக்கத்தை பராமரிக்கவும், புதிய சந்தைகளில் நம்பிக்கையுடன் விரிவுபடுத்தவும் வழிவகை செய்கிறது’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக துறையின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஏற்றுமதி குறித்தும், தங்கள் அமைப்பு எவ்வாறு ஏற்றுமதிக்கு உதவுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
The post இசிஜிசி கடன் உத்தரவாத கழகத்துடன் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.