போச்சம்பள்ளி, ஜன.9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்கின்றனர். அறுவடை செய்யப்படும் வெங்காயம் வெளிமாவட்டம், உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் பல பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால், சின்ன வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதனால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ சின்னவெங்காயம் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ கணக்கில் வாங்கியவர்கள், தற்போது கால்கிலோ, அரை என வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,’ என்றனர்.
The post சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.