அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

 

அவனியாபுரம், ஜன. 8: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜன.14ம் தேதி தைப் பொங்கலன்று நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்தும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் மருத்துவ பரிசோதனை மையம், வாடிவாசல் அமையும் இடங்களை பார்வையிட்டு பணிகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு ஆன்லைன் மூலம் பதியப்படும் காளைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் பரீசிலனை செய்து பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்படும்’’என்றார். இந்த ஆய்வின் போது, அமைச்சருடன் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், 92வது வார்டு கவுன்சிலர் கருப்பையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: