அதன்பிறகு இந்த விவகாரம் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பகல் மற்றும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்ததுடன், அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோவை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை கமிஷனர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட நபரின் முன்பு வைத்து புகாரளித்த சிறுமியின் அப்பா – அம்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகரைச் சேர்ந்த 103வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக மகளிர் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்த பெற்றோரை மிரட்டியுள்ளார். மேலும், சுதாகர் குற்றவாளியை காவல்நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதோடு, சிறுமியிடம் நண்பராக பழகிய ஒரு 14 வயது சிறுவனை போலியாக பலாத்கார வழக்கில் கைது செய்யும்படி இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புகாரில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி வலியுறுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளார். போலியான குற்றவாளியை கைது செய்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ராஜி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கி உள்ளார். இந்த தாக்குதலை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் பார்த்து ரசித்துள்ளார். பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, போலியான குற்றவாளியை கைது செய்யவும் வைத்த அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர், பெண் இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.