ரூ.3 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாணவியை ரூ.3 ஆயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு ‘ஸ்னாப்’ பாலியல் செயலி மூலம் சக கல்லூரி மாணவர்கள் மற்றும் ரயில் பயண நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரக்கோணம் தோழி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் ஏமாற்றி பலாத்காரம் செய்தது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின்படி எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மனவளர்ச்சி குன்றிய மாணவியை ஏமாற்றி வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜிகளில் அறை எடுத்து பலாத்காரம் செய்ததாக திருவள்ளூரை சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் (20), அவரது நண்பரான பள்ளி மாணவன் நரேஷ் (19) ஆகியோரை கடந்த மாதம் 7ம் தேதி தனிப்படை போலீசார் கைது ெசய்தனர்.
மேலும், இந்த வழக்கில் மனவளர்ச்சி குன்றிய மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அம்பத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவன் மணி (எ) சுப்பிரமணி உள்பட 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஒன்றாக படித்து வரும் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, தெரிந்தே தவறான பழக்கத்திற்கு உடந்தையாக இருந்த அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க உதவி ஆய்வாளர் ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படையினரின் ஒரு மாதம் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அரக்கோணம் அருகே உறவினர்கள் வீடுகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்து வந்த கல்லூரி மாணவி சந்தியாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதான சந்தியாவை எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சந்தியா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் 40 விழுக்காடு மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி எப்போதும் ஆட்டோவில் தான் கல்லூரிக்கு வருவார். சந்தியா எதை சொன்னாலும் அவர் செய்வார். இதனால் சந்தியா சில நேரங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வீட்டில் இருந்தே உணவு எடுத்து வருவார். அந்த அளவுக்கு இருவரும் நல்ல தோழியாக இருந்துள்ளனர். அப்போது தான் சந்தியா ரயில் பயணம் மூலம் நந்தனம் கல்லூரியை சேர்ந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் அறிமுகமானார். அவருக்கு பாதிக்கப்பட்ட மாணவியை முதலில் சந்தியா அறிமுகம் செய்து வைத்துள்ளார். முதல் அறிமுகத்தன்றே சுரேஷ் விலை உயர்ந்த சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு சாக்லேட் ரொம்ப பிடிக்கும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சுரேஷ் தனது ஊரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் உடனே பாதிக்கப்பட்ட மாணவியை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார். மாணவிக்கு மன வளர்ச்சி சரியாக இல்லாததால், ஒன்றாக இருந்தது அவருக்கு தவறாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து சுரேஷ் மூலம் அவரது சக நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாணவியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு சந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அதற்காக பாதிக்கப்பட்ட மாணவியை சந்தியா தனது செல்போன் எண் உதவியுடன் ‘ஸ்னாப்’ என்ற பாலியல் செயலியில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

அதன் மூலம் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், கார்த்திக், அம்பத்தூரை சேர்நத் பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோரிடம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து சென்று சீரழித்துள்ளனர். அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் தோழியான சந்தியா தலா ரூ.3 ஆயிரம் வரை பணம் பெற்று வந்துள்ளார். அப்படி அழைத்து செல்லும் மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் அந்த நண்பர்களும் மூலம் பழக்கமான நபர்கள் என பலர் அந்த பாதிக்கப்பட்ட மாணவியை சீரழித்துள்ளனர். இதனால் சந்தியா பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாலியல் புரோக்கராகவே செயல்பட்டு வந்ததுள்ளார். சந்தியாவுக்கு செயலி மூலம் கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு தாராளமாக செலவு செய்து தன் வசப்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை மாணவர்களே சந்தியாவுக்கு தெரியாமல் அழைத்து சென்று வந்துள்ளனர். அப்படி அழைத்துச்சென்ற போது தான் மாணவிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தான் அவரது தந்தைக்கு விவரம் தெரிந்து போலீசில் புகார் அளித்துவிட்டார். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மாணவியை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2024 நவம்பர் வரையிலான காலத்தில் சந்தியா தனது தோழி என்றும் பாராமல் அரக்கோணம் செல்லும் போது ரயில் பயண நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

 

The post ரூ.3 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: