பறவைகள் தின கருத்தரங்கில் மாணவர்கள் பறவைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி

 

திருப்பூர், ஐன‌.6: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள் முருகவேல் மற்றும் கீதாமணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேசியதாவது:

மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பறவைகள் தோன்றி விட்டன. காடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது பறவைகள். பறவைகளை அவற்றின் தோற்றம், சப்தம், நிறம், இறகு, அலகு அமைப்பு ஆகியவற்றை கொண்டு வகைப்படுத்தலாம். பறவைகளை பாதுகாப்பது நமது கடமை. பறவை நோக்கலில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சுற்றுச்சூழல் மீது ஆர்வம் ஏற்படும். கண் பார்வை மேம்படும். மன உளைச்சல் குறையும். இதனை மாணவர்கள் ஒரு பொழுதுபோக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பறவைகள் கணக்கீடு செய்தனர். இதில் கவுதாரி, கரண்டிவாயன், பனை உழவாரன், பாம்பு தாரா, வல்லூறு போன்ற 26 வகையான பறவைகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து பறவைகளை பாதுகாப்போம் எதிர்காலம் காப்போம் என மாணவ மாணவியர்களோடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்‌. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பறவைகள் தின கருத்தரங்கில் மாணவர்கள் பறவைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி appeared first on Dinakaran.

Related Stories: