அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்: அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர், பாலமேடுவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பொங்கலன்று (ஜன. 14) அவனியாபுரம், மாட்டுப்பொங்கல் தினத்தில் (ஜன. 15) பாலமேடு, ஜன. 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

வரும் 16ம் தேதி நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு நேற்று காலை 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணியளவில் 15ம் தேதி நடைபெற உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா, பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசல் அருகே நடந்தது. இரு நிகழ்வுகளிலும் அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்எல்ஏ, கலெக்டர் சங்கீதா, எஸ்பி அரவிந்த், பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜெயலட்சுமி (அலங்காநல்லூர்), சசிகலா (பாலமேடு), திமுக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் ரகுபதி, மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள். பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக், மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள் அலங்காநல்லூர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பாலமேடு சுமதி பாண்டியராஜன், துணை தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், யூனியன் ஆணையாளர் வள்ளி, கலைச்செல்வி, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதல்வர் துவக்குகிறார்
அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ‘‘வழக்கம்போல இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு 15ம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதியும் அரசு வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படியும் தமிழ்நாடு அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 900 காளைகள் வரை அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது. காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். காளைகளுக்கு முன்பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் நடத்தப்படும். ஜல்லிக்கட்டில் அரசு சார்பில் எந்த பரிசும் வழங்கப்படுவதில்லை. பரிசு பொருட்கள் அனைத்தும் விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு வழக்கம்போலவே சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது’’ என்றார்.

The post அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்: அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: