தென் மாவட்டங்களுக்கு செல்லும் 4 பொங்கல் சிறப்பு ரயில்களிலும் 5 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது: ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 பொங்கல் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை சொந்த கிராமங்களில் கொண்டாட நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள் புறப்பட்டுச் செல்ல உள்ளனர். அதிலும், இம்முறை பொங்கலுக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து, பயண திட்டத்தை மக்கள் வகுத்து வருகின்றனர்.

சென்னை, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரயில்களில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பின. சிறப்பு ரயில்களை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை அறிவித்தது.

இதன்படி, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06091, 06092), தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06093, 06094), சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் சிறப்பு ரயில் (06089, 06090), தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103, 06104) ஆகிய 4 ரயில்களை இயக்குவதாக தெரிவித்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (5ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னையில் இருந்தும், வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்தும் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்த மக்கள், போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் முன்பதிவை மேற்கொண்டனர்.

ஐஆர்சிடிசி செயலி மூலமும், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் இந்த டிக்கெட் புக்கிங் நடந்தது. 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 நிமிடத்திற்குள் 4 சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் முழுமையாக நிரம்பின. அதேபோல், இரண்டாம் வகுப்பு எகனாமிக் பெட்டிகளும், மூன்று மற்றும் இரண்டடுக்கு ஏசி பெட்டிகளும் நிரம்பியது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல் வழியே நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் காலை 9 மணிக்கு இரண்டடுக்கு ஏசி பெட்டியில் மட்டும் 25 இருக்கைகள் இருந்தன.

மற்றபடி அனைத்து இருக்கைகளும் நிரம்பியது. பெரும்பாலான பயணிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், காத்திருப்போர் பட்டியல் 300ஐ கடந்து, ரிக்ரிட் ஆகியிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்னும் கூடுதலான சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தென் மாவட்டங்களுக்கு செல்லும் 4 பொங்கல் சிறப்பு ரயில்களிலும் 5 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது: ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: