அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ரூ.100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: அதிமுக ஆட்சியின்போது சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து, மதுரை சிறைத்துறையில் பணியாற்றும் எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் ஒப்பந்ததாரர் உள்பட 11 பேருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் மத்திய சிறை என சென்னை உள்பட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் சிறைத்துறைக்கு எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் 9 மத்திய சிறைகளில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆடிட்டிங் கணக்குகளின்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான மதுரை சிறைத்துறை எஸ்பியான ஊர்மிளா கடந்த 10.2.2016 முதல் 10.2.2021ம் ஆண்டு காலத்தில் கடலூர் மத்திய சிறைத்துறை எஸ்பியாக பணியாற்றிய போது முறைகேடு நடந்தது. அதேபோல், தற்போது மதுரை மத்திய சிறையில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வரும் வசந்தகண்ணன், கடந்த 25.6.2019 முதல் 9.6.2021ம் ஆண்டு வரை பாளையங்கோட்டை சிறைத்துறை கூடுதல் எஸ்பியாக இருந்த காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தற்போது மதுரை மத்திய சிறை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் தியாகராஜன் கடந்த 31.7.2019 முதல் 31.3.2023 வரை வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய காலத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், சிறைத்துறை எஸ்பியாக பணியாற்றிய ஊர்மிளா மற்றும் சிறை துறையில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றிய வசந்தகண்ணன், சிறைத்துறை நிர்வாக அதிகாரிதியாக ராஜன் ஆகியோர் 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிறை கைதிகள் உற்பத்தி செய்யும் எழுத்து பொருட்கள், நோட்டுகள் உள்ளிட்ட உபகரணங்களை நேரடியாக அரசு துறைகளான சிவகங்கை தேவக்கோட்டையில் உள்ள ஆர்டிஓ அலுவலகம், மதுரை மாவட்டம் பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை மாவட்டம் உசிலம்பா்டி தாலுகா அலுவலகம், மதுரை உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம், சிவகங்கை மாவட்டம் ஆதிதிராவிடர் நலவாரியம் அலுவலகம், மதுரை கே.கே.நகர் மாநில டாக்ஸ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் இந்த 3 சிறைத்துறை அதிகாரிகள் கூட்டு சதி மூலம் சிறைத்துறையில் கைதிகள் தயாரித்தது போல் ஆவணங்களை போலியாக தயாரித்து அரசு துறை அலுவலகங்களுக்கு ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்க ஒப்பந்தம் மூலம் மதுரை கிழக்கு மாசி தெருவில் உள்ள ஜே.கே.டிரேடர்ஸ், ஜெனரல் டிரேடிங் கம்பெனி, சென்னை மண்ணடியில் உள்ள ஜெனரல் டிரேடிங் கம்பெனி, சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ்.டிரேடர்ஸ், கொடுங்கையூரில் உள்ள சாந்தி டிரேடர்ஸ், ஸ்ரீ தனலட்சுமி எண்டர்பிரைசர்ஸ், சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது.

பொதுவாக, மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் எழுது பொருட்கள் அரசு துறைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த 3 சிறைத்துறை அதிகாரிகள், எழுது பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் மத்திய சிறைக்கு வழங்கும் நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, சிறை கைதிகள் தயாரித்தது போல் அந்த தனியார் நிறுவனங்கள் மூலமே நேரடியாக எழுது பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி உபகரணங்களை அரசு துறை அலுவலகங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்காக 3 அதிகாரிகளும் போலி ஆவணங்கள் தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சிறைத்துறை 3 அதிகாரிகளும் 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாய் வரை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்தது இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மூலம் உறுதியானது.

அதிமுக ஆட்சி காலத்தில் இந்த முறைகேடு தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் தணிக்கை துறை பதிவேடுகளை கோரியது. ஆனால், இந்த பதிவேடுகளை தணிக்கை துறையிடம் சிறை நிர்வாகம் வழங்கவில்லை. பின்னர் பொருட்கள் தயாரிப்புக்காக ரூ.1.63 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களின் ஜி.எஸ்.டி அறிக்கைகளை தணிக்கை துறை ஆய்வு செய்தது. இதில், அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்பட வில்லை என்பது தெரிந்தது. தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.14.35 கோடி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தணிக்கை துறை சுட்டிக்காட்டயது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவுப்படி மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறைத்துறை கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் சிறைத்துறைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய தனியார் நிறுவன நிர்வாகிகளான வி.எம்.ஜாபர்கான் (74), முகமது அன்சாரி (38), முகமது அலி (43), சீனிவாசன் (64), சாந்தி, சரவணசுப்பு, தனலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

அதைதொடர்ந்து மத்திய சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் என 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை 120(பி), 467, 468, 471, 167, 409, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அதனை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன், ஒப்பந்தம் பெற்ற நிறுவன நிர்வாகி முகமது அன்சாரி, சென்னையில் உள்ள முகமது அலி, சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன், கொடுங்கையூரை சேர்ந்த சாந்தி, திருநெல்வேலி மாவட்டம் பளையங்கோட்டையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி, வெங்கடேஸ்வரி என 11 பேருக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, மதுரை, தேனி என 6 மாவட்டங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது.

இந்த சோதனையில் ஒப்பந்தம் பெற்றபோது லஞ்சமாக பெற்ற பணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பல சிக்கியது. அதில் குறிப்பாக மதுரை சிறைத்துறை எஸ்பியாக உள்ள ஊர்மிளா வீட்டில் இருந்து சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்த ஸ்டேஷனரி ஒப்பந்த நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட பணம் தொடர்பான பல ஆவணங்கள் சிக்கியது. மேலும், வங்கி கணக்கு வழக்குகள் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மதுரை மத்திய சிறையில் எஸ்பி ஊர்மிளா அறை, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், அறை, நிர்வாக அதிகாரி தியாகராஜன் அறைகளில் இருந்து முக்கிய ஆவணங்களை பல லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதிமுக ஆட்சி காலத்தில் சிறைத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிறை துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக ஆட்சியில் முறைகேடு தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை 2017-18, 2018-19 நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் பதிவேடுகளை கோரியது. ஆனால், பதிவேடுகளை சிறை நிர்வாகம் வழங்கவில்லை.
* பின்னர் ரூ.1.63 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களின் ஜி.எஸ்.டி அறிக்கைகளை தணிக்கை துறை ஆய்வு செய்தது. இதில், முறைகேடு செய்தது தெரியவந்தது.

The post அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ரூ.100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: