பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு நேரடியாக கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

* இணையதளம், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
* தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இணையதளம், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025ம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று (நேற்று) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் (சென்னை தவிர) மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராக கொண்டு உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளரை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களில் கரும்பு கொள்முதல் செய்வதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னை தவிர) வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர்/ கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் வேளாண்மை அலுவலர்/துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் உறுப்பினராக கொண்ட வட்டார அளவிலான கரும்பு கொள்முதல் குழு மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளரால் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், வேளாண்மை அலுவலர்/ துணை வேளாண்மை அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் நிலையில் ஒரு அலுவலர் ஆகியோர் கொண்ட கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது.

கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னனுபரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட வாரியாக இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு நேரடியாக கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: