மதுரை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை சாடிவயல் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மைய நிறுவனர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்; ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019-ல் திருச்சி பெரம்பலூர் சாலையில் உள்ள, எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர்.
அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள 7 யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்க செயல்பாட்டு வழிகளை வகுக்க வேண்டும். எம்.ஆர்.பாளைய யானைகளை ஒன்றிய அரசு அனுமதி இல்லாமல் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.
அதில்; யானைகள் மறுவாழ்வு மையத்தில் நீர் பற்றாக்குறை நிலவுவதால் சாடிவயல் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யபப்பட்டுள்ளது. ரூ.8 கோடி செலவில் சாடிவயலில் யானைகள் முகாம் அமைக்கப்பட உள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல் யானைகள் சாடிவயலுக்கு மாற்றப்பட மாட்டாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாடிவயல் முகாமுக்கு பெறப்பட்ட அனுமதி குறித்தும், யானைகளின் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post சாடிவயல் முகாமுக்கு பெறப்பட்ட அனுமதி குறித்தும், யானைகளின் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.