கோத்தகிரி, டிச.31: கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார ஆரம்பகால ஆயத்த பயிற்சி மைய கட்டிடத்தின் கதவை உடைத்து பொருட்களை கரடி சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார ஆரம்ப கால ஆயத்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக ஒரசோலை பகுதியில் வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று உலா வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கரடி ஒன்று ஒரசோலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார ஆரம்ப கால ஆயத்த பயிற்சி மையம் கட்டிடத்தின் கதவை நேற்று முன்தினம் இரவு உடைத்தது.
மேலும் அங்கு இருந்த உணவு பொருட்களை மற்றும் இதர பொருட்களை முற்றிலுமாக சேதப்படுத்தியது. எனவே அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post கோத்தகிரி அருகே பரபரப்பு பள்ளிக்கல்வி வட்டார பயிற்சி மைய கதவை உடைத்து கரடி அட்டகாசம் appeared first on Dinakaran.