புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் மோதி 15 பேர் பலி; அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலா?.. அதிபர் ஜோ பைடன் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கார் மோதியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி நேற்று மதியம் பிறந்தது. நாடு முழுவதும், புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதற்காக பல இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. ரிசார்டுகள், பப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்டவைகளில் மக்கள் ஏராளமானோர் கூடி புத்தாண்டை கொண்டாடினர். இந்நிலையில், அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் போர்பன் தெருவில் புத்தாண்ைட ஏராளமானோர் கொண்டாடி கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியாக அதிவேகமாக ஒரு கார் வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் லாரியை ஓட்டி வந்த மர்ம நபர், கூட்டத்தில் மோதினார். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் லாரியில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உள்பட மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர் பாணி துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த தாக்குதலுக்கு டிரைவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் சோதனை செய்து வெடிகுண்டு ஏதாவது வைத்திருக்கிறார்களா என தேடினர். எதுவும் இல்லை.

இது போல் வாகனத்தை மோதியதில் இறந்த 15 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சிறிது நாட்களாகும். இவை எல்லாம் முடிந்ததும் உடல்களை அடையாளம் காட்ட அவர்களின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசுவோம். பிறகு உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும், என்றனர். இந்நிலையில் இறந்த 4 பேரின் அடையாளங்களை அவர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அவர்களில் நிக்ரா சீயென்னே டீடியக்ஸ் (18), ரெஜ்ஜி ஹண்டர் (37), லஃபாயெட்டே (27), நிகோல் பெரீஸ் (28) ஆவர். இவர்கள் மிஸ்ஸிசிப்பி, லூதியானாவிலிருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வருகை தந்துள்னர்.

இதனிடையே இந்த தாக்குதலை நடத்தியது டெக்சாஸை சேர்ந்த 42 வயதான அமெரிக்க குடிமகனும், ராணுவ வீரருமான ஷம்சுத்-தின் ஜப்பார் என எப்பிஐ அடையாளம் கண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் விரைவில் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஷம்சுத்-தின்-ஜப்பார் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியும் இருந்தது. வாகனத்தில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நிச்சயமாக இத்தாக்குதலை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு பின்னணியில் 2 பேர் இருந்துள்ளனர் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்பிஐ சந்தேகிக்கிறது. அதனால் தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலேயே இந்த சம்பவத்தை எஃப்பிஐ விசாரிக்கிறது.

The post புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் மோதி 15 பேர் பலி; அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலா?.. அதிபர் ஜோ பைடன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: