காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நேற்றிரவு டாஸ்மாக் கடையிலிருந்து மது குடித்துவிட்டு வெளியே வந்த வாலிபரை, மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த சிங்கிலிப்பட்டி வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது சஞ்சய்(25). இவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் புத்தாண்டு விடுமுறையை யொட்டி பரமத்திவேலூரில் உள்ள தனது வீட்டுக்கு சஞ்சய் வந்திருந்தார்.

புத்தாண்டு பிறப்பை யொட்டி நேற்றிரவு 9.30 மணியளவில் வேலகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சஞ்சய் மது குடிக்க சென்றார். மது குடித்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென சஞ்சயை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த சஞ்சயின் சடலத்தை கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் சஞ்சய் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை? appeared first on Dinakaran.

Related Stories: