நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான 20 நாளில் புத்தாண்டையொட்டி புதுமாப்பிள்ளையான வாலிபர் புது மனைவியுடன், கருப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். அப்போது, புத்தாண்டுக்கு புதுத்துணி எடுக்க வேண்டும் என மனைவி கூறவே, புது துணிகளை திருச்செங்கோடு சென்று வாங்கிக்கொள்ளலாம் என மனைவியிடம் வாலிபர் தெரிவித்துள்ளார். ஆனால் சேலத்தில் துணி வாங்கினால் நன்றாக இருக்கும் என கூறிய இளம்பெண், கடந்த 1ம் தேதி கணவரை சேலம் டவுன் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் கடைக்கு சென்று ஜவுளி வாங்கிவிட்டு பழைய பேருந்து நிலையம் வந்தனர்.
அப்போது கழிவறைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு புதுப்பெண் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது கணவர், மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று டவுன் காவல்நிலையத்திற்கு மாயமான அப்பெண் வந்தார்.
அவர் நான்தான் கணவரை விட்டு விட்டு மாயமான புதுப்பெண் என தனது விவரத்தை அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் கணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அந்த இளம்பெண், தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி காவல்நிலையத்தில் உள்ள டேபிளில் வீசினார். ஆனால் அவரது கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டப்பட்ட வேறு ஒரு தாலியும் இருந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அந்த இளம்பெண், திருமணத்திற்கு முன்பே சேலம் கோரிமேட்டை சேர்ந்த செந்தில் என்பவரை காதலித்து வந்ததும், தற்போது அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை, இதுபற்றி திருமணம் நிச்சயமான போதே கூறி இருக்கலாம். இப்போது திடீரென இப்படி செய்து தன்னை அவமானப்படுத்தி விட்டாயே என கூறியதுடன், உறவினர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என மிகவும் சாந்தமாக கூறினார்.
கணவருடன் சென்று குடும்பம் நடத்துகிறாயா? என போலீசார் கேட்டனர். ஆனால் 2ம் திருமணம் செய்து கொண்ட தனது காதலனுடன் தான் செல்வேன் என்றார். இதையடுத்து அவரது பெற்றோர் மகளை சமாதானம் செய்தனர். என்றாலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். இறுதியில், காதலன் கட்டிய தாலியையும் கழற்றி வீசிவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து விடுவதாகவும், தற்போது பெற்றோருடன் செல்வதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருமணமான 20 நாளில் கணவரை ஏமாற்றி விட்டு காதலனை கைபிடித்த இளம்பெண்: காவல் நிலையம் வந்து 2 தாலியையும் வீசிவிட்டு சென்றார் appeared first on Dinakaran.