இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேடி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை பலரும் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புவர். இந்தாண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால், அதற்கு முந்தைய நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என பலர் எதிர்பார்க்கின்றனர். திங்கட்கிழமை அரசு விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வேலை, கல்லூரி படிப்பு ஆகிய காரணங்களால் நகரங்களில் தங்கியிருப்போர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் திங்கட்கிழமை விடுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் வரும் 10ம் தேதி முதலே பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கும். அந்த வகையில் இந்தாண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 6ம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது, குறிப்பாக சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகளை இயக்குவது என்பது குறித்தும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை அதிக நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்தும், பிற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை முடிந்து மீண்டும் திரும்பும் வகையில் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்குவது எப்போது..? அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நாளை மறுநாள் ஆலோசனை appeared first on Dinakaran.