நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!.

சென்னை: அனைவருக்கும் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ தினகரன் நாளிதழ் சார்பாக வாழ்த்துகிறோம். ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின்: உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

* காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: பிறக்கப்போகிற 2025 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிற வகையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற ஒளிமயமான எதிர்காலம் அமையட்டும்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும். 2025ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம்.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழகத்தைப் பாதுகாக்க சூளுரைப்போம். தமிழக மக்களுக்கு, உலகுவாழ் தமிழர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மதச்சார்பற்ற, ஜனநாயக, சமூகநீதி சக்திகள் பரந்துபட்ட அணி சேர்ந்து, வகுப்பு வாத சக்திகளை அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் வரும் 2025ம் ஆண்டிலும் முனைப்புடன் செயல்பட உறுதி ஏற்க வேண்டும்.

* மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம்.

* பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): 2025ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும்.

* திருமாவளவன் (விசிக தலைவர்): மலரும் புத்தாண்டான 2025ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

* பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

* இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பொன்குமார்(விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர்), தமிழ்நாடு ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், சரத்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்பி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!. appeared first on Dinakaran.

Related Stories: