திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாளான இன்று திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாளான இன்று திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலையை அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நேற்று கன்னியாகுமரியில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க நேற்று குமரி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபால கல்வெட்டையும், பாலத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அந்த பாலத்தில் நடந்து சென்று, பாலத்தில் பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடி வழியாக கடல் அழகினை ரசித்தார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வெள்ளி விழாவின் இரண்டாவது நாளான இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாளான இன்று திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: