சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்த முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது. அந்த மசோதாவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும். சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு காரணம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் இல்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆளுநர்கள் வரம்பை மீறக்கூடாது அரசுதான் அரசை நடத்த வேண்டும். இரட்டை அரசு எந்த மாநிலத்திலும் நடக்கக் கூடாது. அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது, இங்கிலாந்து கற்றுக் கொடுத்த பாடமா என தெரியவில்லை.
பிரதமர் ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூருக்கு செல்ல மாட்டேன் என்கிறார். மணிப்பூர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை பிரதமர் மறந்து விட்டாரோ? பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் சொல்லாத நாட்களே இல்லை. மணிப்பூர் கொடுமைகளை ஒன்றிய அரசு விசாரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
உலகத்தில் விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் தான் உள்ளது. ஜிஎஸ்டி சட்டமே தவறு. அமல்படுத்தியதும் தவறு. பலமுறை தெரிவித்தும் செவிடர்கள் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. வரி குறித்து அமெரிக்கா கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. அந்தந்த நாட்டு வரியை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அந்நிய நாடுகள் தீர்மானிக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அமல்படுத்தியதே தவறு உலகின் விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.