ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மலையடிவாரத்தில் தோண்டியுள்ள அகழியை தவிர்த்து மாற்றுப் பாதை வழியாக, காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இதன் அடிவாரத்தில் செண்பகத் தோப்பு வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் 6 காட்டு யானைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகே உள்ள பந்தப்பாறை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
கடந்த 5 மாதமாக விளைநிலங்களுக்குள் புகும் காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின் பேரில், ரேஞ்சர் செல்லமணி தலைமையில், வனத்துறையினர் யானைகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பந்தப்பாறை பகுதியில் யானைகள் நுழையாமல் இருக்க 20 கி.மீ தூரத்திற்கு அகழி வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால், யானைகள் இரவு நேரத்தில் அகழி தோண்டிய பாதைகள் வழியாக வராமல், மாற்றுப்பாதை வழியாக விளைநிலங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு யானைகள்: அகழி தோண்டியும் பயனில்லை; மாற்றுப்பாதை வழியாக வருகின்றன appeared first on Dinakaran.