வேலூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் திரண்ட மக்கள் வீசிய குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகள், பூங்காக்களுக்கு மக்கள் குடும்பம், குடும்பாக சென்று மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் கோட்டை எதிரே உள்ள பூங்காவுக்கும் ஏராளமான மக்கள் வந்தனர். வேலூர் மாவட்டமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகளவு பொதுமக்கள் வேலூர் கோட்டைக்கு வந்தனர். அவர்களில் பலர் கோட்டையை சுற்றிபாரத்தனர்.
மேலும் பூங்காவில் குடும்பம் குடும்பமாக அமர்ந்தும், விளையாடியும் பொழுதுபோக்கினர். மாலையில் கோட்டையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பூங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் மனித தலைகளாக காட்சியளித்தது. அவ்வாறு வந்தவர்கள் அங்கு தள்ளுவண்டியில் உள்ள பானிபூரி, குளிர்பானம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை காகித தட்டு, பிளாஸ்டிக் தட்டுகளில் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் அவற்றை குப்பை தொட்டியில் போடாமல் பூங்காவிலேயே வீசி எறிந்துவிட்டு சென்றனர். இதனால் அழகாக காட்சியளித்த பூங்கா குப்பை மேடாக மாறியது. இவற்றை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இன்று ஈடுபட்டனர்.
The post வேலூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்: தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் appeared first on Dinakaran.