நடைபாதையில் கடை அமைப்பதில் தகராறு பெண் மீது தாக்குதல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி அவ்வப்போது ஆய்வு நடத்தி, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை பலமுறை அப்புறப்படுத்தினாலும் மீண்டும், அதே இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த பிரியா என்பவர், மார்க்கெட் வளாக சாலையோரத்தில் நேற்று முன்தினம் பழக்கடை வைத்துள்ளார்.

அப்போது, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வியாபாரி மணிகண்டன் (40) என்பவர், இங்கு கடை போடக்கூடாது என்று பிரியாவிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரியா, மணிகண்டன் கன்னத்தில் அறைந்துள்ளார். பதிலுக்கு மணிகண்டனும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதில் பிரியாவின் கை எலும்பு முறிந்தது. இதையடுத்து மற்ற வியாபாரிகள் வந்து 2 பேரையும் விலக்கிவிட்டனர். இதன் பின்னர் பிரியா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து திரும்பினார். இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து வியாபாரி மணிகண்டனை கைது செய்தனர்.

The post நடைபாதையில் கடை அமைப்பதில் தகராறு பெண் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: