உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்த விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.10,000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்து பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (49). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகைள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,000 ரொக்கம் ஆகியவை திருடுபோய் இருந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி நரேஷ், இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் சரக டிஎஸ்பி ரவி அபிராம் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சற்று தூரம் ஓடிச்சென்று நின்றது. இதேபோன்று, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே தெருவில் உள்ள பாஸ்கர் மற்றும் சுப்ரமணி ஆகியோர் வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்து இப்பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: