10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், போட்டோ ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் நாகராஜ் (41). இவர் இதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரது 10 வயது மகள், மகன் ஆகிய இருவரும் நாகராஜ் வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம்.

தனது அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் நாகராஜின் வீட்டிற்குள் சென்று சிறுமி உரிமையோடு டிவி பார்ப்பதையும், லேப்டாப் பார்ப்பதையும் பழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இதனை தவறாக எடுத்துகொண்ட நாகராஜ், கடந்த 2020ம் ஆண்டில் சிறுமியின் தம்பிக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு, தனது அறையில் உள்ள லேப் டாப்பில் ஆபாச வீடியோக்களை சிறுமிக்கு காண்பித்து சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று அடிக்கடி மிரட்டி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றொரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளானர். அதன்பேரில் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு, குற்றவாளியான நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி நாகராஜை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post 10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் ஸ்டுடியோ கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: