பல புராணங்கள் அனுமனைக் கண்டு வியக்கின்றது. ஏனெனில், எல்லா சித்தர்களுக்கும் மகாசித்தராக விளங்கும் யோகேஸ்வரரான, அஷ்டமா சித்திகளை பெற்றவருமான, சூரியனையே குருவாகக் கொண்ட ஆஞ்சநேயரை பார்த்து வியக்கிறது. மலைக்கும் ஆஞ்சநேயருக்கும் எப்போதுமே தொடர்புண்டு. ஏனெனில், ஆஞ்சநேயர் பிறந்ததே மலையில்தான். திருப்பதியிலுள்ள ஏழுமலையில் ஒன்றான அஞ்சனாத்ரி எனும் மலைதான் அவரின் அவதார தலம். அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாகப் பிறந்தார்.
அதனாலே ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். உலகிலுள்ள எல்லா மலைகளும் அவருடைய தோழர்கள். மலையைப்போல உறுதியானவர். மலையைப்போல வலிமை உடையவர். அதே சமயம் அமைதியானவர். அறிவில் எல்லோரையும் மலைக்க வைப்பவர். மலைகளின் ரகசியங்களை நன்கு அறிந்தவர். உயர்ந்த மலையின் உச்சியில் நின்று சூரியனை தொட்டவர். அவரே இவருக்கு குருவாக இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்.
பிரம்மாவே இவரின் அருமைபுரிந்து அஷ்டமாசித்திகளையும் அருளினார். இவரிடமிருந்த அஷ்டமா சித்திகள் என்னவென்று பார்ப்போமா. அஷ்டமாசித்திகள் என்பது எட்டு வகையான சித்திகளை குறிக்கும். முதலாவதாக அனிமா என்பது அணுமாதிரி மிகச் சிறியதாக மாறுவது. கிட்டத்தட்ட ஆலவிதைக்குள் ஒளிந்திருக்கும் ஆலமரம்போல ஒரு அணுவளவு உயிரையும், உடலையும் சுருக்கிக் கொள்வது. அடுத்து மகிமா, இருப்பதிலேயே மிகப் பெரிய உருவமாவது.
மலையின் எதிரே நின்று மலையைவிட பெரிதாக மாறுவது. மூன்றாவதாக கரிமா, எடுத்த உருவத்தை கனத்துப்போகச் செய்வது. மலையை பெயர்க்க வேண்டுமெனில் மலையின் கனத்த சக்தியின் அளவை, தன் உடலுக்குள் ஏற்றுக்கொள்வது. நான்காவதாக லகிமா என்றொரு சித்தி. லேசாக தன் உடலை மாற்றிக் கொள்வது. இவை எல்லாவற்றைவிட பிராப்திஹி என்றொரு சித்தி உண்டு. மேலே சொன்னவை அனைத்தும் இவரை அடைந்து விடுவது. இவரின் எண்ணப்படி கேட்பது என்று பொருள். இதற்கடுத்து பிரகாம்யம் என்றொரு சித்தி. அதாவது இன்னொரு உடலில் கூடுவிட்டு கூடுபாய்கிற வித்தை. வேறொரு உடலில் நுழைந்து வெளியே வரும் திறன்.
ஆறாவதாக ஈஸித்துவம். அதாவது எல்லாவற்றையும் சொடுக்கு நேரத்தில் நிறைவேற்றிக் கொள்வது. வாயுவின் வேகத்தில் காரியமாற்றுவது. இறுதியாக வசித்துவம் என்றொரு சித்தியுண்டு. எது செய்தாலும் வசீகரத்துடன் செய்வது. பேச்சில், செயலில் எல்லாவற்றிலும் ஈர்ப்பை உண்டாக்கும் சித்தி. இந்த அஷ்டமா சித்திகளும் ஆஞ்சநேயரிடத்தில் சாதாரணமாக இருந்தது. ராம காவியத்தில் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சித்திகள் இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஆஞ்சநேயர் கடலைத்தாண்ட வேண்டி, மகிமா என்கிற சித்தியையும், கரிமா என்ற சித்தியையும் உபயோகப்படுத்தி கடலைத் தாண்டினார். இது முற்றிலும் சித்தர்களுக்கும், யோகிகளுக்குமே கைவந்த விஷயம். நான் என்பது இந்த உடலில்லை. மனம் இல்லை. உடலையும், மனதையும் தாண்டிய, எல்லாவற்றையும் இயக்கும் ஆத்மாதான் என்கிற நிலையை நெருங்கும்போது இந்த சித்திகள் கைகூடும் என்கின்றனர்.
கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)
The post அஷ்டமா சித்திகள் பெற்ற அனுமன் appeared first on Dinakaran.