தென்மாவட்டங்களுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உரமூடைகள் வருகை: 1044 டன் விவசாய பணிக்கு அனுப்பி வைப்பு

நெல்லை, டிச. 30: நெல்லை அருகே கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு 1044 டன் யூரியா மற்றும் 340 டன் பொட்டாஷ் நேற்று வந்து இறங்கியது. இந்த உரமூடைகள் 4 மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பிசான சாகுபடி தீவிரமடைந்துள்ளது. பிரதான அணைகளில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு காரணமாகவும், கடந்த 15 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குளங்களில் ஓரளவுக்கு நீர் இருப்பு காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடியை நம்பிக்கையோடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் தேவைக்கேற்ப யூரியா உள்ளிட்ட உரங்களை வேளாண் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

உரத்தேவையை ஈடுகட்டும் வகையில் நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு 1044.810 டன் ஐபிஎல் யூரியா உர மூடைகள் நேற்று வந்திறங்கின. கூடவே 340 டன் பொட்டாஷ் மூடைகளும் வந்திறங்கின. இவ்வாறு கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு வந்த உர மூடைகளை நெல்லை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குநர் (உரக்கட்டுப்பாடு) சந்திரபோஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பகுதிகளுக்கு 278.71 டன் யூரியா, 65.500 டன் பொட்டாஷ் அனுப்பிவைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு 81 டன் யூரியா, தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு 192.150 டன் யூரியா, 75 டன் பொட்டாஷ், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 279 டன் யூரியா, 150 டன் பொட்டாஷ் என 4 மாவட்டங்களுக்கும் யூரியா, பொட்டாஷ் மூடைகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘ விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை சப்ளை செய்ய வேண்டும் என உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post தென்மாவட்டங்களுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உரமூடைகள் வருகை: 1044 டன் விவசாய பணிக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: