கைதிக்கு கஞ்சா விற்றதாக திருச்சி சிறை வார்டன் அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி: சிறையில் கைதியிடம் கஞ்சா விற்றதாக திருச்சி மத்திய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் சூர்யா (27). இவர், திருச்சி பெட்டவாய்த்தலையில் குற்ற செயலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் உள்ளதா என்று கடந்த 22ம் தேதி சோதனை நடந்தது. அப்போது கைதிகளின் அறைகளில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதில் கைதி சூர்யாவிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், சிறையில் உள்ள வார்டன் ஒருவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் கிடைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், வார்டன் எழில்ராஜ் (35), சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் கைதி சூர்யா, வார்டன் எழில்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.

இந்தநிலையில் சிறை வார்டன் எழில்ராஜை சஸ்பெண்ட் செய்து மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்றுமுன்தினம் இரவு அதிரடியாக உத்தரவிட்டார்.

The post கைதிக்கு கஞ்சா விற்றதாக திருச்சி சிறை வார்டன் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: