ஆனால், நினைவிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாக அதற்கான அறக்கட்டளை உருவாக்க வேண்டும், அதன் பிறகே பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய முடியும், இதற்கெல்லாம் நேரம் தேவைப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிச்சயம் நினைவிடம் கட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியது. இப்படிப்பட்ட சூழலில், சிறப்பு இடம் எதுவும் ஒதுக்காமல், யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘2010ல் முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் இறந்த போது, பாஜவிடமிருந்து எந்த கோரிக்கையும் வராமலேயே காங்கிரஸ் அவருக்கு ஜெய்ப்பூரில் சிறப்பு இடம் ஒதுக்கி, அங்கு தகனம் செய்து நினைவிடம் கட்டப்பட்டது. 2012ல் மகாராஷ்டிராவில் பால் தாக்கரே மறைந்த போது, மும்பை சிவாஜி பூங்காவில் உடனடியாக சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டது.
இப்படி, அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் எப்போதும் மரியாதையுடன் விடை அளித்த நிலையில், மன்மோகன் சிங் விஷயத்தில் பாஜவின் இத்தகைய நடத்தை துரதிருஷ்டவசமானது. மரியாதைக்குரிய ஒருநபரின் இறுதிசடங்கை சிறப்பு இடத்திற்கு பதிலாக நிகம்போத் காட்டில் பாஜ அரசு நடத்தியிருக்கிறது. இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை பாஜ உருவாக்கி உள்ளது. பல தரப்பு மக்களும் அதிருப்தி தெரிவித்ததால்தான் நினைவிடம் கட்டக் கூட அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
இதற்கு பாஜ சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘‘முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மறைவுக்குப் பிறகு அவரை எப்படி காங்கிரஸ் நடத்தியது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் தனது தந்தை மறைவின் போது காங்கிரஸ் நடந்து கொண்ட விதத்தை கூறியதை கேளுங்கள். எனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் இனியும் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
The post மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க தவறிய ஒன்றிய அரசு: காங்.-பாஜ இடையே வார்த்தை மோதல் appeared first on Dinakaran.